இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய தொடர் ரத்தானால் பேரிழப்பு ஏற்படும்: லபுஸ்சேன் கருத்து


இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய தொடர் ரத்தானால் பேரிழப்பு ஏற்படும்: லபுஸ்சேன் கருத்து
x
தினத்தந்தி 4 May 2020 11:30 PM GMT (Updated: 2020-05-05T03:05:21+05:30)

இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய போட்டி தொடர் நடக்காமல் போனால் பேரிழப்பு ஏற்படும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் லபுஸ்சேன் தெரிவித்தார்.

சிட்னி, 

உலகையே நிலைகுலைய வைத்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 13-ந் தேதிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. ஆஸ்திரேலியாவை பொறுத்தமட்டில் செப்டம்பர் 30-ந் தேதி வரை அந்த நாட்டு எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி அரங்கேறுமா? என்ற சந்தேகம் நிலவி வருகிறது. அத்துடன் இந்திய கிரிக்கெட் அணி வருகிற அக்டோபர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர், 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது. இந்த போட்டி தொடரும் நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான இந்த போட்டி தொடர் ரத்து செய்யப்பட்டால் அது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு பெரும் வருவாய் இழப்பாக அமையும். ஏற்கனவே நிதி பிரச்சினையில் சிக்கி தவிக்கும் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு மேலும் இடியாப்ப சிக்கலை ஏற்படுத்தும் எனலாம்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்சேன் ஆன்-லைன் மூலம் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

இந்தியாவுக்கு எதிரான போட்டி தொடர் நடைபெற முடியாமல் போனால் அது எனக்கு மட்டுமின்றி, அணியினருக்கும், நாட்டுக்கும் பேரிழப்பாகும். கொரோனா தடுப்பு பணிகளை ஆஸ்திரேலியா சுகாதார அமைப்புகள் மிகவும் சிறப்பாக செய்து வருகின்றன. இதனால் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அரசு எடுத்து வரும் சிறப்பான நடவடிக்கை காரணமாக இந்திய அணியினர் வரும் காலத்திற்கு முன்பாக நிலைமை சீராகி விடும் என்று நம்புகிறேன். எல்லா விஷயங்களும் வேகமாக மாறி வருகின்றன. எனவே நாங்கள் திட்டமிடுகிற மாதிரி எதிர்காலம் அமையும் என்று நினைக்கிறோம். நாங்கள் நினைத்தபடி எல்லாம் நடந்தால் நன்றாக இருக்கும். ஆனால் அப்படி நடக்காமல் போனால் அது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும்.

கடந்த ஆண்டு எதிர்பாராத வகையில் சிறப்பாக அமைந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரத்தில் எனது ஆட்டத்தில் மேலும் முன்னேற்றம் காண்பது குறித்து கவனம் செலுத்தி வருகிறேன். கொரோனா பிரச்சினை முடிந்து களம் திரும்புகையில் அடுத்த நிலைக்கு முன்னேறுவதற்கு முயற்சி செய்ய தயாராக இருக்கிறேன். ஒருநாள் போட்டியை பொறுத்தமட்டில் கடைசி கட்டத்தில் அடித்து ஆடும் விஷயத்தில் முன்னேற்றம் காண வேண்டும் என்று விரும்புகிறேன். குறுகிய வடிவிலான போட்டியில் மேலும் அதிக ஓவர்கள் பந்து வீசும் அளவுக்கு ஏற்றம் அடைய நினைக்கிறேன். ஆட்டத்தில் எந்தவொரு நிலைக்கு உயர்ந்தாலும் அதில் திருப்தி அடையாமல் மேலும் ஏற்றம் காண வேண்டும் என்ற நோக்கில் செயல்பட வேண்டியது அவசியமானதாகும். தற்போதைய நேரம் மிகவும் முக்கியமானது. இதற்கு முன்பு இதுமாதிரி ஒருபோதும் நடந்ததில்லை. உங்கள் ஆட்டம் குறித்து மறுஆய்வு செய்வதற்கும்., சிறந்த வீரராக உருவெடுக்க நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டியது என்ன? என்பதை புரிந்து கொள்வதற்கும் இந்த தருணம் நல்லதொரு வாய்ப்பாகும் என்று அவர் கூறினார்.

Next Story