இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக அக்தர் விருப்பம்


இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக அக்தர் விருப்பம்
x
தினத்தந்தி 5 May 2020 10:30 PM GMT (Updated: 5 May 2020 7:06 PM GMT)

இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக விருப்புவதாக அக்தர் தெரிவித்துள்ளார்.

லாகூர், 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் சமூக வலைதள ‘ஆப்’ ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “வருங்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சி அளிக்க நிச்சயமாக நான் ஆர்வமாக இருக்கிறேன். அறிவை பரப்புவது தான் எனது பணியாகும். பந்து வீச்சு குறித்து நான் கற்றுக்கொண்ட அறிவை மற்றவர்களுக்கு பரப்ப தயாராக உள்ளேன். பயிற்சியாளராகும் வாய்ப்பு கிடைத்தால் தற்போது உள்ள பந்து வீச்சாளர்களை விடவும் அதிக ஆக்ரோஷமாகவும், வேகமாகவும் செயல்படக்கூடிய பந்து வீச்சாளர்களை என்னால் உருவாக்க முடியும். அவர்கள் பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசும் போது களத்தில் வெளிப்படுத்தும் ஆக்ரோஷத்துடன் கூடிய வாக்குவாதம் உங்களுக்கு பிடித்தமானதாக இருக்கும். அத்துடன் ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் விருப்பம் இருக்கிறது. 1998-ம் ஆண்டில் நான் தெண்டுல்கரை முதல்முறையாக சந்தித்த போது இந்தியாவில் அவருக்கு அந்த அளவுக்கு பெயரும், புகழும் இருப்பது தெரியாது. சென்னையில் நடந்த போட்டியின் போது தான் அவரை ரசிகர்கள் கடவுள் போல் பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்தேன். தெண்டுல்கருடன் எனக்கு நல்ல நட்பு இருந்தது. அந்த ஆண்டில் நடந்த இந்திய பயணத்தின் போது எனது வேகப்பந்து வீச்சை இந்திய ரசிகர்கள் நன்கு ரசித்தனர். அப்போது எனக்கு இந்தியாவில் நிறைய ரசிகர்கள் கூட்டம் இருந்தது’ என்று தெரிவித்தார்.

Next Story