இந்திய கிரிக்கெட் வீரர்கள் எந்த நடவடிக்கைகளையும் ஏற்கத் தயார் - பிசிசிஐ


இந்திய கிரிக்கெட் வீரர்கள் எந்த நடவடிக்கைகளையும் ஏற்கத் தயார்  - பிசிசிஐ
x
தினத்தந்தி 8 May 2020 7:11 AM GMT (Updated: 8 May 2020 7:11 AM GMT)

இந்திய கிரிக்கெட் வீரர்கள் எந்த நடவடிக்கைகளையும் ஏற்கத்தயாராக இருப்பார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

ஆஸ்திரேலியாவில் நான்கு டெஸ்டுகள், மூன்று ஒருநாள் ஆட்டங்களை டிசம்பர், ஜனவரியில் விளையாடவுள்ளது இந்திய அணி. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தத் தொடர்கள் நடைபெறாமல் போனால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்புக்கு ரூ. 1,480 கோடி (196 மில்லியன் டாலர்) நஷ்டம் ஏற்படும்.

எனினும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு, ஆஸ்திரேலிய அரசிடம் தொடர்ந்து இதுகுறித்து விவாதித்து வருகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யவிருந்தால் பின்பற்றவேண்டிய நடைமுறைகளும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த வருட இறுதியில் ஆஸ்திரேலியாவில் விளையாட்டுப் போட்டிகள் மீண்டும் தொடங்கும் என விளையாட்டுத்துறை மந்திரி ரிச்சர்ட் கோல்பெக் கூறினார்.

இந்தநிலையில், சிட்னி மார்னிங் ஹெரால்டுக்கு பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறியதாவது:

கிரிக்கெட் ஆட்டங்கள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும்.  ஆஸ்திரேலியாவில் இரு வாரங்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய நிலைமை எல்லோருக்கும் உள்ளது. ஊரடங்கிலிருந்து வெளியே வந்து இன்னொரு நாட்டில் இரு வாரங்கள் தனிமைப்படுத்திக்கொள்வது என்பது நல்ல விஷயம் தான். ஊரடங்கு முடிந்த பிறகு என்ன நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது இனிமேல் தான் தெரிய வரும்.

இரு அணிகளும் 5 டெஸ்டுகள் விளையாட வேண்டும் என்பது ஊரடங்குக்கு முன்னால் பேசப்பட்டது. ஊரடங்கால் நிறைய நஷ்டம் ஏற்பட்டதால் ஒருநாள், டி20 ஆட்டங்களை அதிகமாக நடத்தி கூடுதல் வருமானம் பார்க்கவேண்டும் என்று தான் கிரிக்கெட் வாரியங்கள் முடிவு எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story