2 வாரம் இந்திய அணி தனிமைப்படுத்திக் கொள்ள தயார்: கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு


2 வாரம் இந்திய அணி தனிமைப்படுத்திக் கொள்ள தயார்: கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
x
தினத்தந்தி 8 May 2020 11:30 PM GMT (Updated: 8 May 2020 7:26 PM GMT)

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விளையாட செல்லும் போது அங்கு 2 வாரங்கள் தனிமைப்படுத்திக் கொள்ள இந்திய அணி தயாராக இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

சிட்னி, 

இந்திய கிரிக்கெட் அணி டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட திட்டமிட்டு உள்ளது. ஏற்கனவே கொரோனா வைரசின் அச்சுறுத்தலால் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டு பெரும் நிதி நெருக்கடியில் தவித்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், இந்திய தொடர் ரத்தாகி விடக்கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இந்திய தொடர் நடைபெறாமல் போனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.1,480 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும்.

இதுபற்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அந்த நாட்டு அரசுடன் விவாதித்துள்ளது. பயணக்கட்டுப்பாடுகளில் இந்திய அணிக்காக சிலவற்றை தளர்த்த அந்த நாட்டு அரசு சம்மதித்துள்ளது. ஆண்டின் இறுதியில் மறுபடியும் சர்வதேச போட்டிகள் தொடங்க வாய்ப்பு இருப்பதாக ஆஸ்திரேலிய விளையாட்டுத்துறை மந்திரி ரிச்சர்ட் கோல்பெக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதே சமயம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் ஒரு பகுதியாக வெளிநாட்டில் இருந்து வருவோரை 2 வார காலம் கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டால் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அதை ஏற்க தயாராக இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் சிங் துமால் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

வேறு வழியில்லை, ஒவ்வொருவரும் 2 வாரம் தனிமைப்படுத்திக் கொள்ளத்தான் வேண்டும். கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். 2 வாரம் என்பது நீண்ட காலம் அல்ல. நீண்ட கால ஊரடங்கில் இருந்து விடுபட்டு இன்னொரு நாட்டுக்கு செல்லும் போது 2 வாரங்கள் தனிமைப்படுத்தப்படுவது விளையாட்டு வீரர்களுக்கு நல்ல விஷயம் தான். ஊரடங்கு முடிந்த பிறகு எத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்படும் என்பதை நாம் முதலில் பார்க்க வேண்டும்.

இந்த தொடரின் போது கூடுதலாக ஒரு டெஸ்ட் போட்டியில் (மொத்தம் 5 டெஸ்ட்) விளையாடுவது குறித்து முன்பே விவாதிக்கப்பட்டது. ஆனால் அதற்கு ஏற்ப காலக் இடைவெளி அமைந்தால் அவர்கள் விருப்பப்படி கூடுதலாக ஒரு டெஸ்ட் அல்லது 2 ஒரு நாள் அல்லது இரண்டு 20 ஓவர் போட்டிகள் சேர்க்கப்படலாம். இது இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களின் முடிவை பொறுத்தது.

ஆனால் ஊரடங்கு எதிரொலியாக நிறைய நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் அதிகமான வருமானம் ஈட்ட வேண்டும் என்று தான் இப்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விரும்பும். கூடுதலாக ஒரு டெஸ்ட் போட்டியை தொடரில் இணைப்பதை காட்டிலும் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளின் மூலம் தான் கணிசமான வருவாய் கிட்டும். மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியதும் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெறுவது கடினம் தான். கொரோனா பாதிப்பால் நீண்ட காலம் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டு உள்ளது. நீண்ட காலம் எந்தவித பயிற்சியும் இன்றி நேரடியாக அதுவும் முக்கியமான 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்க முடியுமா? இதுபற்றி அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் கவனத்தில் கொள்ளும். என்னை பொறுத்தவரை 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடப்பது சந்தேகம் தான்.

20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிவைக்கப்பட்டு, அந்த காலக்கட்டத்தில் ஐ.பி.எல். போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முனைப்பு காட்டுவதாக வெளியான தகவல் தவறானது. இப்போதைக்கு ஐ.பி.எல். குறித்து நாங்கள் எதுவும் திட்டமிடவில்லை. முதலில் வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு வர வாய்ப்பு கிடைக்க வேண்டும். அவர்களுக்கும் அதில் விருப்பம் இருக்க வேண்டும். அதன் பிறகு 2 வாரம் தனிமைப்படுத்தப்பட வேண்டும். பிறகு ஐ.பி.எல்-ல் விளையாட வேண்டும். இதுபற்றி எல்லாம் இப்போது எப்படி யோசிக்க முடியும்? ஐ.பி.எல். தொடர்பாக வெளியாகும் தகவல்கள் எல்லாம் யூகத்தின் அடிப்படையிலானது. கொரோனா தாக்கம் முடிந்து நிலைமை சரியான பிறகே மீண்டும் கிரிக்கெட் போட்டியை தொடங்குவது குறித்து சிந்திப்போம் என்று அவர் கூறினார்.

Next Story