தேசிய கிரிக்கெட் அகடமியில் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க பிசிசிஐ திட்டம்


தேசிய கிரிக்கெட் அகடமியில் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க பிசிசிஐ திட்டம்
x
தினத்தந்தி 16 May 2020 11:16 AM GMT (Updated: 16 May 2020 11:16 AM GMT)

ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தேசிய கிரிக்கெட் அகடமியில் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூரு,

2020ஆம் ஆண்டு துவக்கம் முதல் பரவி வரும் கொரோனா வைரஸ் உலகையே முற்றிலும் ஸ்தம்பிக்க வைத்து விட்டது. இந்தியாவில் மார்ச் மாதம் முதல் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது 85 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

இதில் மும்பை நகரம் தான் இந்தியாவிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கே 17 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, அவர்களில் 13,891 பேர் சிகிச்சையில் உள்ளனர். அந்த நகரத்தில் மட்டும் 600க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க 17-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பல தொழில்களும் முடங்கி உள்ளன. கிரிக்கெட் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டது மட்டுமில்லாமல், கிரிக்கெட் வீரர்கள் பயிற்சிகள் செய்ய முடியாத நிலையும் உள்ளது.

வீரர்கள் வீட்டிலேயே இருந்தால் அவர்கள் திறன் குறைய வாய்ப்பு உள்ளதால் பிசிசிஐ அதிரடியாக வீட்டிலேயே அவர்களை பயிற்சி செய்ய வைத்து அதை கண்காணித்து வருகிறது. லாக்டவுன் விதிகள் தளர்த்தப்படும் வரை இந்த முறையை பின்பற்ற உள்ளது.

தற்போது இந்த பயிற்சிக்கென பிரத்யேக செயலியை உருவாக்கி உள்ளது பிசிசிஐ. அதன் மூலம், கிரிக்கெட் வீரர்கள் என்ன பயிற்சி செய்கிறார்கள்? அவர்கள் எந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் உள்ளிட்டவற்றை கூறி, கண்காணித்து வருகிறது பயிற்சியாளர்கள் குழு.

லாக்டவுன் விதிகள் தளர்த்தப்பட்டு, வெளியே செல்ல அனுமதி கிடைத்தால் கிரிக்கெட் வீரர்களுக்கு அருகே உள்ள மைதானம் அல்லது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சி அளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வீரர்கள் விரைவில் கிரிக்கெட் போட்டிகளில் ஆட முடியும்.

ஆனால், மற்ற வீரர்கள் பயிற்சி பெற வெளியே வந்தாலும், முக்கிய வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி வீட்டை விட்டு வெளியே வர முடியாது என கூறப்படுகிறது. அவர்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மும்பையில் இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலையில் உள்ளனர். எனவே, அவர்கள் பயிற்சி செய்ய முடியாது என ஒரு பிசிசிஐ அதிகாரி கூறி உள்ளார். அவர்கள் இருவரும் வீட்டிலேயே இருந்து உடற்பயிற்சி மட்டுமே செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், மற்ற இந்திய வீரர்கள் போட்டிகளில் பங்கேற்க தயார் ஆனாலும் கோலி, ரோகித் பங்கேற்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Next Story