பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததால் தண்டனையில் இருந்து தப்பினார், கெய்ல்


பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததால் தண்டனையில் இருந்து தப்பினார், கெய்ல்
x
தினத்தந்தி 16 May 2020 11:01 PM GMT (Updated: 2020-05-17T04:31:15+05:30)

சர்வான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிய கெய்ல் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததால் ஒழுங்கு நடவடிக்கையில் இருந்து தப்பினார்.

ஜமைக்கா, 

ஜமைக்கா அணியில் இருந்து நீக்கப்பட்டதால் சர்வான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிய கெய்ல் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததால் ஒழுங்கு நடவடிக்கையில் இருந்து தப்பினார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், கரிபீயன் பிரிமீயர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஜமைக்கா தலவாஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்த சீசனுக்கான ஜமைக்கா அணியில் அவரை அந்த அணி நிர்வாகம் தக்கவைக்க விரும்பாமல் கழற்றி விட்டது. இதையடுத்து அவரை செயின்ட் லூசியா ஜோக்ஸ் அணி தேர்வு செய்தது. ஜமைக்கா அணியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு அந்த அணியின் பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான ராம்நரேஷ் சர்வான் தான் முக்கிய காரணம் என்று கெய்ல் பகிரங்கமாக குற்றம் சாட்டி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘கொரோனாவை விட கொடியவர், விஷப் பாம்பு, முதிர்ச்சி அற்றவர், நம்பிக்கை துரோகி’ என்று சர்வானை சகட்டு மேனிக்கு கெய்ல் திட்டி தீர்த்தார்.

ஆனால் கெய்லை நீக்கியது அணி உரிமையாளர்களின் முடிவே தவிர இதில் எனது பங்கு துளியும் கிடையாது என்று சர்வான் திட்டவட்டமாக மறுத்தார். இதற்கிடையே குறிப்பிட்ட அணியுடன் ஒப்பந்தத்தில் உள்ள வீரர் விதிமுறையை பின்பற்ற வேண்டும். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கும், சி.பி.எல். கிரிக்கெட்டுக்கும் களங்கத்தை ஏற்படுத்திய கெய்ல் தண்டனையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய தலைவர் ரிக்கி ஸ்கெரிட் கூறியிருந்தார்.

இந்த நிலையில் 40 வயதான கிறிஸ் கெய்ல் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள் ளார். அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில்,‘ ஜமைக்கா அணியில் இருந்து நான் நீக்கப்பட்டதன் உண்மை நிலவரத்தை ரசிகர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டுமே அந்த வீடியோவை வெளியிட்டேன். ஜமைக்கா அணியில் இருந்து நான் 2-வது முறையாக விலக்கப்பட்டு இருக்கிறேன். என்னுடைய சி.பி.எல். கிரிக்கெட் வாழ்க்கையை ஜமைக்கா அணிக்காக, சபீனா பார்க் மைதானத்தில் என்னுடைய சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் முடித்துக் கொள்ள விரும்பினேன். ஏற்கனவே இரண்டு முறை எனது தலைமையில் ஜமைக்கா அணி பட்டம் வென்றுள்ளது.

அவர்கள் என்னை நடத்திய விதத்தால் ஏற்பட்ட மனக்கசப்பு இன்னும் உள்ளது. அந்த வீடியோவில் நான் பேசிய வார்த்தைகளில் உறுதியாக இருக்கிறேன். அவை எனது இதயத்தில் இருந்து வெளிப்பட்டவை. அதே நேரத்தில் எனது பேச்சின் சில பகுதிகள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கும், சி.பி.எல். கிரிக்கெட்டுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியதை ஒப்புக் கொள்கிறேன். சி.பி.எல். கிரிக்கெட்டின் புகழுக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை. இந்த போட்டியின் மூலம் 7 ஆண்டுகளாக கரிபீயன் ரசிகர்கள் முன் விளையாடும் அதிர்ஷ்டத்தை பெற்று இருக்கிறேன். அதற்காக நன்றி. இந்த போட்டியில் உற்சாகமாக மட்டையை சுழட்டியதோடு மட்டுமின்றி அது வளரவும் உதவி இருக்கிறேன். இந்த ஆண்டு புதிய அணிக் காக களம் காண ஆர்வமுடன் உள்ளேன்’ என்று கெய்ல் அதில் கூறியுள்ளார்.

கெய்ல் தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததால் திருப்தி அடைந்த சி.பி.எல். நிர்வாகம், ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி அமைக்கத் தேவையில்லை என்று கூறி இத்துடன் இந்த சர்ச்சையை முடித்து வைத்தது. இதனால் அபராதம் அல்லது தடை போன்ற நடவடிக்கைகளில் இருந்து கெய்ல் தப்பினார்.

Next Story