‘எனது ஒருநாள் போட்டி வாய்ப்பை அழித்தவர் அப்ரிடி’ - பாகிஸ்தான் முன்னாள் வீரர் கனேரியா குற்றச்சாட்டு


‘எனது ஒருநாள் போட்டி வாய்ப்பை அழித்தவர் அப்ரிடி’ - பாகிஸ்தான் முன்னாள் வீரர் கனேரியா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 16 May 2020 11:07 PM GMT (Updated: 2020-05-17T04:37:13+05:30)

எனது ஒருநாள் போட்டி வாய்ப்பை அழித்தவர் அப்ரிடி என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் கனேரியா குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி, 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா அளித்த ஒரு பேட்டியில், ‘நானும், அப்ரிடியும் ஒரே துறை அணிக்காக உள்ளூர் போட்டியில் விளையாடிய போதும், ஒருநாள் போட்டியில் விளையாடிய போதும் அவர் எப்பொழுதும் எனக்கு எதிராகவே நடந்து கொண்டார். ஒருநபர் எப்பொழுதும் உங்களுக்கு எதிராக நடந்து கொண்டால், அந்த சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் அதற்கு மதத்தை தவிர வேறு என்ன காரணமாக இருக்கும் என்று நினைக்க முடியும். நான் அதிக ஒருநாள் போட்டியில் விளையாட முடியவில்லை. அதற்கு காரணம் அப்ரிடி தான். உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் அவர் கேப்டனாக இருக்கையில் என்னிடம் நியாயமாக நடந்து கொண்டதில்லை. எந்தவித காரணமும் இல்லாமல் என்னை அணியில் விளையாடவிடாமல் வெளியில் உட்கார வைப்பார். மற்றவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அவர் எனக்கு ஒருபோதும் ஆதரவு அளித்தது கிடையாது. அவர் என்னை இப்படி நடத்தியதற்கு காரணம் என்ன என்று புரிந்து கொள்ள முடியவில்லை. அதையும் மீறி நான் பாகிஸ்தான் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடியதற்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 2000 முதல் 2010-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கனேரியா 61 டெஸ்ட் மற்றும் 18 ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார். அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக விளையாடிய இந்து மதத்தை சார்ந்த 2-வது வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story