‘தேசிய விளையாட்டு அமைப்புகளுக்கு நிதி ஒதுக்குங்கள்’ - மந்திரிக்கு, ஐ.ஓ.ஏ. தலைவர் கடிதம்


‘தேசிய விளையாட்டு அமைப்புகளுக்கு நிதி ஒதுக்குங்கள்’ - மந்திரிக்கு, ஐ.ஓ.ஏ. தலைவர் கடிதம்
x
தினத்தந்தி 17 May 2020 10:58 PM GMT (Updated: 17 May 2020 10:58 PM GMT)

தேசிய விளையாட்டு அமைப்புகளுக்கு நிதி ஒதுக்குங்கள் என மந்திரிக்கு, ஐ.ஓ.ஏ. தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.

புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்தியாவில் அனைத்து விளையாட்டுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மார்ச் மாதத்தில் இருந்து வீரர்களால் பயிற்சியில் கூட ஈடுபட முடியவில்லை. வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இந்த நிலையில் கொரோனா தாக்கம் முடிந்து மீண்டும் விளையாட்டு மற்றும் அது தொடர்பான பணிகளை தொடங்குவதற்கு நிறைய நிதி உதவி தேவைப்படுகிறது. ‘ஒரு முறை அனுமதி’ என்ற அடிப்படையில் பல்வேறு விளையாட்டு அமைப்புகளுக்கும் நிதி உதவி அளிக்கும்படி மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூவுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐ.ஓ.ஏ.) தலைவர் நரிந்தர் பாத்ரா கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ.10 கோடி, ஒலிம்பிக் விளையாட்டு சார்ந்த தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கு தலா ரூ.5 கோடி, ஒலிம்பிக் அல்லாத விளையாட்டு சங்கங்களுக்கு தலா ரூ.2½ கோடி, மாநில ஒலிம்பிக் சங்கங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்கும்படி அவர் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். ‘இப்போதைக்கு ஸ்பான்சர்ஷிப் கிடைக்க வாய்ப்பில்லை. இந்த உதவியை செய்து தராவிட்டால் மீண்டும் விளையாட்டு நடைமுறைகளை சுமுகமாக நடத்துவதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டு விடும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நரிந்தர் பாத்ராவின் வேண்டுகோளின் படி கணக்கிட்டால் விளையாட்டு அமைச்சகம் கிட்டத்தட்ட மொத்தம் ரூ.220 கோடி ஒதுக்க வேண்டியது இருக்கும்.

Next Story