20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிப்போனால் ஐ.பி.எல். கிரிக்கெட்டை நடத்த வேண்டும்: கம்மின்ஸ் வலியுறுத்தல்


20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிப்போனால் ஐ.பி.எல். கிரிக்கெட்டை நடத்த வேண்டும்: கம்மின்ஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 May 2020 12:00 AM GMT (Updated: 28 May 2020 12:00 AM GMT)

20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிப்போனால், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என்றும் கம்மின்ஸ் வலியுறுத்தி உள்ளார்.

சிட்னி, 

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தள்ளிப்போனால் அந்த சமயத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரை நடத்தினால் நன்றாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற அக்டோபர் 18-ந் தேதி முதல் நவம்பர் 15-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா அச்சத்தால் இந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் 29-ந் தேதி தொடங்க இருந்த 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிப்போனால், அந்த காலக்கட்டத்தில் (அக்டோபர் மற்றும் நவம்பர்) ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்தலாம் என்று திட்டமிட்டு இந்திய கிரிக்கெட் வாரியம் மறைமுகமாக காய் நகர்த்தி வருகிறது. ஆனால் ஐ.பி.எல். போட்டி நடைபெறுவதற்கு வசதியாக 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை தள்ளி வைத்தால் அது மோசமான செயலாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன்கள் ஆலன் பார்டர், இயான் சேப்பல் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான பேட் கம்மின்ஸ் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்பட்டால், அந்த சமயத்தில் ஐ.பி.எல். போட்டியை நடத்தினால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் இந்த போட்டியை பார்க்கிறார்கள். நீண்ட கால இடைவெளிக்கு பிறகு கிரிக்கெட் போட்டி நடைபெற இருப்பதால் இந்த போட்டிக்கான மவுசு மேலும் கூடுதலாகவே இருக்கும்.

இந்த ஐ.பி.எல். நடைபெற வேண்டும் என்று சொல்வதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. முக்கியமாக சொல்லப்போனால் இது ஒரு சிறந்த போட்டி தொடராகும். மீண்டும் களம் திரும்புவதற்கு மட்டுமின்றி அடுத்த போட்டி தொடருக்கும் நான் தயாராகவே இருக்கிறேன்‘ என்று தெரிவித்துள்ளார். 27 வயதான பேட் கம்மின்சை ரூ.15½ கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story