20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்துவதில் அதிக ஆபத்து இருக்கிறது: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அதிகாரி


20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்துவதில் அதிக ஆபத்து இருக்கிறது: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அதிகாரி
x
தினத்தந்தி 29 May 2020 11:33 PM GMT (Updated: 29 May 2020 11:33 PM GMT)

20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்துவதில் அதிக ஆபத்து இருப்பதாக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

மெல்போர்ன், 

கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் இந்த ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவதில் அதிக ஆபத்து இருக்கிறது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

16 அணிகள் இடையிலான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற அக்டோபர் 18-ந் தேதி முதல் நவம்பர் 15-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளில் பயண கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் இந்த போட்டிக்காக ஒரே இடத்தில் அத்தனை அணிகளும் கூடுவது சிரமம் என்று கருதப்படுகிறது. இதனால் இந்த போட்டி தள்ளிப்போடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை திட்டமிட்டபடி நடத்தலாமா? அல்லது தள்ளி வைக்கலாமா? என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) போர்டு பிரதிநிதிகள் கூட்டம் டெலிகான்பரன்ஸ் மூலம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கிரிக்கெட் ஆர்வலர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த கூட்டத்தில் முடிவு எடுப்பது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதாவது அடுத்த மாதம் (ஜூன்) 10-ந் தேதி வரை நிலவும் சூழ்நிலையை பார்த்து அதற்கு தகுந்தபடி முடிவு செய்யலாம் என்று ஐ.சி.சி. கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி கெவின் ராபர்ட்ஸ் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடக்கலாம் என்ற நம்பிக்கையுடன் தான் ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் இருக்கிறோம். ஆனால் கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் இந்த ஆண்டில் இந்த உலக கோப்பை போட்டியை நடத்துவதில் மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது என்பதையும் சொல்லித் தான் ஆக வேண்டும். 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தள்ளிப்போடப்பட்டால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சுமார் ரூ.400 கோடி வருவாய் இழப்பை சந்திக்க வேண்டியது வரும். இந்த உலக கோப்பை போட்டி குறிப்பிட்ட காலத்தில் நடக்காவிட்டால், அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடத்தப்படவும் வாய்ப்பு இருக்கிறது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி நடந்தாலும், சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்பதால் ரசிகர்கள் வருகை மிகவும் குறைவாகத் தான் இருக்கும். வழக்கமாக ரசிகர்கள் வருகையின் மூலம் ரூ.250 கோடி வரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு வருவாய் கிடைக்கும். ஆனால் தற்போது 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடந்தால் அதன் மூலம் ரூ.100 கோடி கிடைப்பது கூட மிகப்பெரிய கேள்விக்குறியாகும். அத்துடன் இந்த சீசனுக்கான போட்டிகளை உரிய மருத்துவம் மற்றும் சுகாதார பாதுகாப்பு வசதிகளுடன் நடத்த ரூ.50 கோடி வரை செலவாகும்.

டிசம்பர் 3-ந் தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரை பிரிஸ்பேன், அடிலெய்டு, மெல்போர்ன், சிட்னி ஆகிய நகரங்களில் நடத்த முடிவு செய்து இருக்கிறோம். இருப்பினும் போட்டிக்குரிய காலக்கட்டத்தில் நிலவும் சூழ்நிலைக்கு தகுந்தபடி தான் இந்த போட்டி தொடர் நடைபெறும் இடங்கள் இறுதி செய்யப்படும். தேவைப்பட்டால் அனைத்து போட்டிகளும் ஒரே இடத்தில் கூட நடத்தப்படலாம் என்று அவர் கூறினார்.

Next Story