ரசிகர்கள் இல்லாமல் 20 ஓவர் உலக கோப்பையை நடத்துவது சரியானதாக இருக்காது: வாசிம் அக்ரம் கருத்து


ரசிகர்கள் இல்லாமல் 20 ஓவர் உலக கோப்பையை நடத்துவது சரியானதாக இருக்காது: வாசிம் அக்ரம் கருத்து
x
தினத்தந்தி 6 Jun 2020 1:16 AM GMT (Updated: 6 Jun 2020 1:16 AM GMT)

ரசிகர்கள் இல்லாமல் 20 ஓவர் உலக கோப்பையை நடத்துவது சரியானதாக இருக்காது என்று வாசிம் அக்ரம் கருத்து தெரிவித்துள்ளார்.

கராச்சி, 

ரசிகர்களை அனுமதிக்காமல் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவது என்பது சரியானதாக இருக்காது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

16 அணிகள் இடையிலான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 18-ந் தேதி முதல் நவம்பர் 15-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டி தள்ளிவைக்கப்படலாம் என்று தெரிகிறது. இந்த போட்டியின் தலைவிதி குறித்து வருகிற 10-ந் தேதி நடைபெற இருக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் போர்டு நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

ரசிகர்களை அனுமதிக்காமல் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தலாம் என்ற யோசனை சரியானது கிடையாது. ரசிகர்கள் இல்லாமல் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை எப்படி நடத்த முடியும். உலக கோப்பை போட்டி என்றாலே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் கூடும். உலகின் எல்லா பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் தங்கள் அணிக்கு ஆதரவு அளிப்பதற்காக வருவார்கள். ரசிகர்கள் இன்றி பூட்டிய ஸ்டேடியத்தில் போட்டி நடந்தால் இதுபோன்ற உற்சாகமான சூழ்நிலையை கொண்டு வர முடியாது. எனவே உலக கோப்பை போட்டியை நடத்த சரியான நேரத்துக்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் காத்து இருந்து முடிவு எடுக்கும் என்று நான் நம்புகிறேன். கொரோனா தாக்கம் தணிந்து விட்டால் கட்டுப்பாடுகள் எளிமையாக்கப்பட்டு விடும். அதன் பிறகு நம்மால் முறையாக உலக கோப்பை போட்டியை நடத்த முடியும்.

பந்தை பளபளக்க வைக்க எச்சிலை பயன்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தற்காலிகமாக தடை விதித்து இருப்பதை வேகப்பந்து வீச்சாளர்கள் நிச்சயம் விரும்பமாட்டார்கள். அதற்கு பதிலாக வியர்வையை பயன்படுத்தி கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அது எச்சிலை போன்ற தாக்கத்தை ஏற்படுத்தாது. எச்சிலை வைத்து பந்தை பளபளக்க செய்து விட்டு, அதன் மீது சற்று வியர்வையை பயன்படுத்தலாம். ஆனால் வியர்வையை அதிகம் பயன்படுத்தினால் பந்து ரொம்ப ஈரப்பதமாகி விடும். இந்த பிரச்சினைக்கு ஐ.சி.சி. சரியான தீர்வை கண்டறிய வேண்டியது அவசியமானது என்று நினைக்கிறேன். அதேநேரத்தில் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று அவர் கூறினார்.


Next Story