20 ஓவர் உலக கோப்பை தள்ளிவைக்கப்பட்டால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்தலாம் - மைக்கேல் ஹோல்டிங் கருத்து


20 ஓவர் உலக கோப்பை தள்ளிவைக்கப்பட்டால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்தலாம் - மைக்கேல் ஹோல்டிங் கருத்து
x
தினத்தந்தி 9 Jun 2020 12:06 AM GMT (Updated: 9 Jun 2020 12:06 AM GMT)

20 ஓவர் உலக கோப்பை தள்ளிவைக்கப்பட்டால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்தலாம் என்று மைக்கேல் ஹோல்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.


புதுடெல்லி, 

20 ஓவர் உலக கோப்பை தள்ளிவைக்கப்பட்டால் அந்த சமயத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்தலாம் என்று வெஸ்ட்இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்தார்.

16 அணிகள் இடையிலான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற அக்டோபர் 18-ந் தேதி முதல் நவம்பர் 15-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளில் பயண கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் இந்த போட்டிக்காக எல்லா அணிகளும் ஒரே இடத்தில் கூடுவது என்பது சிரமம் என்பதால் இந்த போட்டி தள்ளிப்போடப்படலாம் என்று தெரிகிறது.

20 ஓவர் உலக கோப்பை போட்டியை திட்டமிட்டப்படி நடத்தலாமா? அல்லது தள்ளிவைக்கலாமா? என்பது குறித்து நாளை (புதன்கிழமை) நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) போர்டு பிரதிநிதிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது. 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிப்போனால், அந்த சமயத்தில் (அக்டோபர், நவம்பர் மாதங்களில்) ஏற்கனவே காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டு இருக்கும் 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் சத்தமின்றி காய் நகர்த்தி வருகிறது. இந்த சீசனில் ஐ.பி.எல். போட்டியை நடத்த முடியாமல் போனால் ரூ.4 ஆயிரம் கோடி வரை வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால் இந்த போட்டியை நடத்த வேறுவழியில்லை என்றால் வெளிநாட்டில் கூட நடத்தலாமா? என்பது குறித்தும் இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசீலனை செய்து வருகிறது.

இந்த நிலையில் வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், வர்ணனையாளருமான மைக்கேல் ஹோல்டிங் இன்ஸ்டாகிராம் உரையாடலின் போது கூறியதாவது:

ஐ.பி.எல். போட்டிக்கு வழிவிடும் வகையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தாமதப்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை. குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்குள் எந்த நாட்டினரும் வரக்கூடாது என்று அந்த நாட்டு சட்டப்படி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெறவில்லை என்றால் அந்த சமயத்தில் ஐ.பி.எல். போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு எல்லா உரிமைகளும் இருக்கிறது.

பந்தை பளபளப்பாக்க எச்சிலை பயன்படுத்த தடை விதித்து இருப்பதை பெரிய பிரச்சினையாக நான் கருதவில்லை. அந்த புதிய நடைமுறைக்கு தகுந்தபடி வீரர்கள் தங்களை மாற்றிக்கொள்வதில் தான் சற்று காலம் பிடிக்கும். எச்சிலை பயன்படுத்தி பந்தை பளபளப்பாக்குவது இயற்கையான ஒன்று தான். பந்தை ஈரப்பதம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் எச்சிலை தான் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்பது கிடையாது. கைகள் மற்றும் நெற்றியில் இருந்து வழியும் வியர்வையையும் எச்சிலை போன்ற தன்மை கொண்டது தான். எனவே அதனை பயன்படுத்தலாம். வியர்வையின் மூலம் கொரோனா பரவும் என்று யார் கூறியதாகவும் நான் கேள்விப்படவில்லை. எச்சிலை பயன்படுத்த தடை செய்து இருப்பதால் நடைமுறை பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை. ஏற்கனவே இதனை செய்து பழக்கப்பட்டவர்களுக்கு அதனை மாற்றி கொள்வது கடினமானதாக இருக்கும்.

பிட்ச் விவகாரத்தில் தலையிடுவதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. சில பராமரிப்பாளர்கள் தேவைக்கு தகுந்தபடி பிட்ச்சை தயாரிக்கவில்லை என்றால் ஆட்டம் பாழாகி விடும். எனவே அதில் கவனம் செலுத்துவதை விடுத்து பிட்ச்க்கு தகுந்த மாதிரி விளையாட வீரர்களுக்கு பயிற்சி அளிக்க முயற்சிக்க வேண்டும். 50 ஓவர் போட்டியை ஐ.சி.சி. ஒருபோதும் நீக்காது என்று நான் நினைக்கிறேன். டெலிவிஷன் உரிமத்தை பொறுத்தமட்டில் ஒருநாள் போட்டியின் மூலம் தான் ஐ.சி.சி.க்கு அதிக வருவாய் வருகிறது. 20 ஓவர் போட்டிக்கு நான் பெரிய ரசிகன் கிடையாது. ஆனால் பிரச்சினை என்னவென்றால் 20 ஓவர் போன்ற குறுகிய வடிவிலான போட்டியில் கிடைக்கும் விறுவிறுப்பை தான் மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். போட்டியை குறுகிய வடிவிலாக்கும் விஷயத்தில் நாம் கவனம் செலுத்தக்கூடாது. அப்படி செய்தால் கடைசியில் ஆட்டத்தில் ஒன்றும் இல்லாமல் போய்விடும்.

இனவெறிக்கு எதிராக விளையாட்டில் இருக்கும் விதிமுறைகள் காயத்துக்கு போடும் பிளாஸ்திரி மாதிரி தான். அதனை வைத்து காயத்தை மறைக்கலாம். ஆனால் குணப்படுத்த முடியாது. இனவெறி சமூகத்தில் இருந்து தான் வருகிறது. எனவே மக்களிடம் மாற்றம் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். இனவெறி பிரச்சினையை சமூகத்தில் இருந்து நீக்க வேண்டியது அவசியமானதாகும். சமூகத்தில் இருந்து அந்த பிரச்சினை நீங்கி விட்டால், அது எங்கு இருந்து விளையாட்டில் வரப்போகிறது என்று அவர் கூறினார்.


Next Story