கிரிக்கெட்

3-வது வரிசையில் விளையாடி இருந்தால் டோனி பல சாதனைகள் படைத்து இருப்பார் - கம்பீர் கருத்து + "||" + Tony would have achieved many if he had played in the 3rd row The concept of Gambhir

3-வது வரிசையில் விளையாடி இருந்தால் டோனி பல சாதனைகள் படைத்து இருப்பார் - கம்பீர் கருத்து

3-வது வரிசையில் விளையாடி இருந்தால் டோனி பல சாதனைகள் படைத்து இருப்பார் - கம்பீர் கருத்து
டோனி 3-வது வரிசையில் பேட்டிங் செய்து இருந்தால் பல சாதனைகள் படைத்து இருப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி, 

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனான டோனி 2007-ம் ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பையையும், 2011-ம் ஆண்டில் ஒருநாள் உலக கோப்பையையும், 2013-ம் ஆண்டில் சாம்பியன்ஸ் கோப்பையையும் இந்தியாவுக்கு வென்று கொடுத்து இருக்கிறார். தொடக்க காலங்களில் சில போட்டிகளில் 3-வது வரிசையில் இறங்கி சிறப்பாக செயல்பட்ட டோனி பின்னர் 6-வது வரிசையில் களம் கண்டு வெற்றிகரமாக போட்டியை முடித்து கொடுக்கும் பேட்ஸ்மேனாக விளங்கினார்.

கேப்டன்ஷிப்பில் பல சாதனைகளை படைத்துள்ள டோனி அணியின் நலனில் அதிக அக்கறை காட்டியதால் சொந்த பேட்டிங்கில் சாதனை படைக்க முடியாமல் போனது. 2014-ம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய டோனி கடந்த ஆண்டு (2019) நடந்த ஒருநாள் உலக கோப்பை போட்டிக்கு பிறகு எந்தவொரு போட்டியிலும் விளையாடவில்லை. 350 ஒருநாள் போட்டியில் ஆடி 10 சதம், 73 அரைசதம் உள்பட 10,773 ரன்கள் குவித்துள்ள 38 வயதான டோனியின் எதிர்காலம் என்ன? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

வியக்கதக்க வீரராக விளங்கி இருப்பார்

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டனாகாமல் டோனி 3-வது வரிசையில் விளையாடி இருந்தால் பல சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகள் படைத்து இருப்பார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் கூறியதாவது:-

கிரிக்கெட் உலகம் ஒன்றை தவற விட்டு விட்டது. அது டோனி இந்திய அணிக்காக 3-வது பேட்ஸ்மேனாக களம் இறங்காமல் போனதாகும். அவர் கேப்டனாக இருக்காமல், 3-வது வீரராக களம் இறங்கி இருந்தால் கிரிக்கெட் உலகம் வித்தியாசமான ஒரு டோனியை ரசித்து இருக்கும். முற்றிலும் மாறுபட்ட டோனியை நாம் பார்த்து இருக்க முடியும்.

டோனி 3-வது வீரராக விளையாடி இருந்தால் இன்னும் நிறைய ரன்கள் குவித்து இருப்பார். பல சாதனைகளை தகர்த்து புதிய சாதனைகள் படைத்து இருப்பார். சாதனையை மறந்து விடுங்கள். சாதனைகள் படைக்கப்படுவதே, உடைக்கப்படுவதற்கு தானே. அவர் கேப்டனாக இருக்காமல் 3-வது வரிசையில் விளையாடி இருந்தால் வியக்கதக்க வீரராக விளங்கி இருப்பார். ஒரு சமமான பிட்ச்சில் டோனி 3-வது வீரராக களம் இறங்கி இருந்தால், தற்போது உள்ள பவுலர்களை மனதில் வைத்து பார்த்தால் அவர் வேறு மாதிரியான சாதனைகளை படைத்து இருப்பார். உதாரணத்துக்கு தற்போதைய இலங்கை, வங்காளதேசம், வெஸ்ட்இண்டீஸ் பவுலிங்கை நினைத்து பாருங்கள். அதில் சரியான தரம் கிடையாது. சர்வதேச போட்டிக்கு தகுதியானதாக இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.