கிரிக்கெட்

இந்த ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்துவது சாத்தியமற்றது - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைவர் சொல்கிறார் + "||" + In this year It is impossible to host the 20-over World Cup Says the Australian Cricket Board chairman

இந்த ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்துவது சாத்தியமற்றது - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைவர் சொல்கிறார்

இந்த ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்துவது சாத்தியமற்றது - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைவர் சொல்கிறார்
கொரோனா தொற்றுக்கு மத்தியில் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்துவது சாத்தியமற்றது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைவர் ஏர்ல் எட்டிங்ஸ் தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன், 

16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற அக்டோபர் 18-ந் தேதி முதல் நவம்பர் 15-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டி நடைபெறுவதில் தொடர்ந்து சந்தேகம் நிலவி வருகிறது.

20 ஓவர் உலக கோப்பை போட்டியை திட்டமிட்டபடி நடத்தலாமா? அல்லது தள்ளிவைக்கலாமா? என்பது குறித்து முடிவு செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பிரதிநிதிகள் கூட்டம் டெலிகான்பரன்ஸ் மூலம் இரண்டு முறை நடந்தும் எந்தவித முடிவு எட்டப்படவில்லை. கடைசியாக கடந்த வாரம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இன்னும் ஒரு மாதம் பொறுத்து இருந்து அந்த சமயத்தில் நிலவும் சூழ்நிலைக்கு தகுந்தபடி முடிவு செய்யலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிப்போனால் அந்த காலகட்டத்தில் ஐ.பி.எல். போட்டியை நடத்தலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் காய் நகர்த்தி வருகிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைவர் ஏர்ல் எட்டிங்ஸ் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசுகையில், ‘இந்த ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அதிகாரபூர்வமாக ரத்து செய்யப்படவோ, தள்ளிவைக்கப்படவோ இல்லை. இன்னும் பல நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் தீவிரமாக இருந்து வரும் சூழ்நிலையில் 16 நாட்டு அணிகளை ஆஸ்திரேலியாவுக்கு வரவைக்க முயற்சிப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்று நினைக்கிறேன். அல்லது இதனை செய்வது மிக, மிக கடினமானதாக இருக்கும்.

உலக கோப்பை போட்டி குறித்து நாங்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் ஆலோசித்து இருக்கிறோம். போட்டி குறித்து இந்த தருணத்தில் கணிப்பது சற்று கடினமானதாகும்’ என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வந்த கெவின் ராபர்ட்ஸ் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதையடுத்து 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான அமைப்பு குழுவின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வரும் நிக் ஹாக்லி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜேம்ஸ் சுதர்லேண்டுக்கு பதிலாக தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற கெவின் ராபர்ட்சின் பதவி காலம் அடுத்த ஆண்டு (2021) இறுதி வரை இருந்த நிலையில் அவர் திடீரென விலகல் முடிவை எடுத்துள்ளார். கொரோனா பாதிப்பால் பல்வேறு கிரிக்கெட் போட்டிகள் ரத்தானதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த பிரச்சினையை கெவின் ராபர்ட்ஸ் திறம்பட கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து அவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் இருந்து ஒதுங்கும் முடிவுக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.