சூதாட்ட தடைக்காலம் முடிவுக்கு வருகிறது: கேரள கிரிக்கெட் அணியில் ஸ்ரீசாந்தை சேர்க்க முடிவு


சூதாட்ட தடைக்காலம் முடிவுக்கு வருகிறது: கேரள கிரிக்கெட் அணியில் ஸ்ரீசாந்தை சேர்க்க முடிவு
x
தினத்தந்தி 19 Jun 2020 12:08 AM GMT (Updated: 19 Jun 2020 12:08 AM GMT)

சூதாட்டம் காரணமாக விதிக்கப்பட்ட தடைக்காலம் முடிவுக்கு வருவதால் ஸ்ரீசாந்தை கேரள கிரிக்கெட் அணியில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான கேரளாவை சேர்ந்த ஸ்ரீசாந்த் கடந்த 2013-ம் ஆண்டில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் போது, ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டத்தில் ஈடுபட்டதாக டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஸ்ரீசாந்துக்கு ஆயுட்கால தடை விதித்தது. சூதாட்ட வழக்கு குறித்து விசாரணை நடத்திய டெல்லி சிறப்பு கோர்ட்டு 2015-ம் ஆண்டில் ஸ்ரீசாந்தை விடுதலை செய்து உத்தரவிட்டது.

ஆனாலும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையாக எடுக்கப்பட்ட ஆயுட்கால தடையை நீக்க கிரிக்கெட் வாரியம் மறுத்தது. இதனால் ஸ்ரீசாந்த் தன் மீதான தடையை நீக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டை நாடினார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை காலத்தை குறைப்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. இதன் பின்னர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நன்னடத்தை அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி டி.கே.ஜெயின் விசாரணை நடத்தி ஸ்ரீசாந்தின் தண்டனை காலம் 7 ஆண்டுகளாக குறைக்கப்படுவதாக அறிவித்தார். அவரது தடைக்காலம் வருகிற செப்டம்பர் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது.

இந்த நிலையில் தடைக்காலம் முடிந்ததும் ஸ்ரீசாந்தை இந்த சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட் போட்டிக்கான கேரள அணியில் சேர்த்து கொள்ள தயாராக இருப்பதாக கேரள மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. அவரது உடல் தகுதியை பொறுத்து அணியில் இடம் பெறுவது முடிவாகும் என்று கேரள அணியின் புதிய பயிற்சியாளர் டினு யோஹனன் கூறியுள்ளார்.

இது குறித்து ஸ்ரீசாந்திடம் கேட்ட போது, ‘எனக்கு வாய்ப்பளிக்கும் கேரள கிரிக்கெட் சங்கத்துக்கு உண்மையிலேயே நான் கடமைப்பட்டு இருக்கிறேன். எனது உடல் தகுதியை நிரூபித்து போட்டிக்கு வலுவாக திரும்புவேன். எல்லா சர்ச்சைகளும் ஓய்வெடுக்க வேண்டிய தருணம் இதுவாகும். கேரள கிரிக்கெட் சங்கத்தில் உள்ள அனைவரும் எனக்கு ஆதரவாக உள்ளனர். தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறேன். கேரள அணியில் நான் விளையாடுவதை நீங்கள் எல்லோரும் பார்ப்பீர்கள். நான் விளையாடிய காலத்தில் இருந்ததை விட கிரிக்கெட் நிறைய மாற்றம் கண்டு இருக்கிறது. நாட்டுக்காக விளையாடிய காலங்களை இன்னும் நினைத்து பார்க்கிறேன்‘ என்றார்.

37 வயதான ஸ்ரீசாந்த் 2005 முதல் 2011-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்திய அணிக்காக 27 டெஸ்ட் போட்டியில் விளையாடி 87 விக்கெட்டும், 53 ஒருநாள் போட்டியில் ஆடி 75 விக்கெட்டும், 10 இருபது ஓவர் போட்டியில் ஆடி 7 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார். அத்துடன் அவர் 2007-ம் ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பை மற்றும் 2011-ம் ஆண்டில் ஒருநாள் உலக கோப்பையை வென்ற டோனி தலைமையிலான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story