கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் இன்று இங்கிலாந்து பயணம் + "||" + Pakistan cricket team to leave for UK on June 28, as six out of 10 infected players test negative

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் இன்று இங்கிலாந்து பயணம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் இன்று இங்கிலாந்து பயணம்
கொரோனா பாதிப்பில் சிக்கியவர்களை தவிர்த்து மற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இன்று இங்கிலாந்துக்கு புறப்படு கிறார்கள்.
லாகூர், 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. ரசிகர்கள் இன்றி ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படும் இந்த போட்டிக்குரிய அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.

இங்கிலாந்து தொடருக்காக பாகிஸ்தான் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட 29 வீரர்களில் மூத்த வீரர் சோயிப் மாலிக் தவிர அனைவருக்கும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு கொரோானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ், இளம் பேட்ஸ்மேன் ஹைதர் அலி, வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் உள்பட 10 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. பின்னர் முகமது ஹபீஸ் தனியாக வேறொரு ஆஸ்பத்திரியில் நடத்திய சோதனையில் தனக்கு கொரோனா இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்திருப்பதாக கூறினார். அவரது செயலால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிருப்திக்குள்ளானது.

இதையடுத்து கொரோனாவில் சிக்கிய 10 வீரர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் முகமது ஹபீஸ், வஹாப் ரியாஸ், பஹார் ஜமான், ஷதப் கான், முகமது ரிஸ்வான், முகமது ஹஸ்னைன் ஆகிய 6 வீரர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதற்கான ‘நெகட்டிவ்’ முடிவு வந்துள்ளது. மற்ற 4 வீரர்களுக்கும் கொரோனா இருப்பதால் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இருப்பினும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 6 வீரர்களையும் இங்கிலாந்து தொடருக்கு உடனடியாக அனுப்ப முடியாது. ஏனெனில் ஒவ்வொரு வீரருக்கும் 2 ‘நெகட்டிவ்’ முடிவு வேண்டும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே நிபந்தனை விதித்திருக்கிறது. இதனால் அவர்கள் அனைவருக்கும் அடுத்த வாரம் 3-வது முறையாக சோதனை நடத்தப்படும். அதிலும் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தால் அவர்கள் இங்கிலாந்துக்கு செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி வாசிம்கான் தெரிவித்தார்.


இந்த நிலையில் மாற்று ஆட்டக்காரர்களான வேகப்பந்து வீச்சாளர் முசா கான், விக்கெட் கீப்பர் ரோகைல் நசிர் ஆகியோர் பாகிஸ்தான் அணியில் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 20 வீரர்களும், பயிற்சியாளர், உதவியாளர் 11 பேரும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) லாகூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் லண்டனுக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.

பாகிஸ்தான் வீரர்கள் அங்கு சென்றதும் உடனடியாக அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். பிறகு அவர்கள் ஒர்செஸ்டரில் உள்ள சொகுசு விடுதியில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இந்த நடைமுறை நிறைவு பெற்றதும் ஜூன் 13-ந்தேதியில் இருந்து பயிற்சியில் ஈடுபடுவார்கள். தங்களுக்குள் இரண்டு அணியாக பிரிந்து இரண்டு 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடவும் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

பாகிஸ்தான் அணி வருமாறு:- அசார் அலி (டெஸ்ட் கேப்டன்), பாபர் அசாம் (20 ஓவர் அணியின் கேப்டன்), அபித் அலி, இமாம் உல்-ஹக், ஷான் மசூத், ஆசாத் ஷபிக், பவாத் ஆலம், இப்திகர் அகமது, குஷ்தில் ஷா, சர்ப்ராஸ் அகமது, பஹீம் அஷ்ரப், முகமது அப்பாஸ், நசீம் ஷா, ஷகீன் ஷா அப்ரிடி, சோகைல் கான், உஸ்மான் ஷின்வாரி, இமாத் வாசிம், யாசிர் ஷா, முசா கான், ரோகைல் நசிர்.தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக யூனிஸ்கான் நியமனம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக யூனிஸ்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.