கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட ஹபீஸ் உள்பட 6 பாகிஸ்தான் வீரர்கள் இங்கிலாந்து செல்கிறார்கள் + "||" + Six Pakistani players go to England, including Hafiz, after recovering from corona
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட ஹபீஸ் உள்பட 6 பாகிஸ்தான் வீரர்கள் இங்கிலாந்து செல்கிறார்கள்
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட முகமது ஹபீஸ் உள்பட 6 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்துக்கு பயணிக்க உள்ளனர்.
லாகூர்,
மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக அசார் அலி தலைமையிலான 20 பேர் கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த 28-ந்தேதி இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது. அங்கு பாகிஸ்தான் வீரர்களுக்கும், பயிற்சியாளர் உள்ளிட்ட உதவியாளர் அனைவருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் உடனடியாக பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது அவர்கள் ஒர்செஸ்டர் நகரில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த நடைமுறை முடிந்ததும் பயிற்சியை தொடங்குவார்கள்.
இந்த தொடருக்காக தேர்வு செய்யப்பட்டிருந்த ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், சுழற்பந்து வீச்சாளர் ஷதப் கான் உள்பட 10 வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் கழற்றி விடப்பட்டனர்.
இதன் பிறகு நடத்தப்பட்ட அடுத்த கட்ட பரிசோதனையில் 6 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்தது. இருப்பினும் இரண்டு முறை ‘நெகட்டிவ்’ முடிவு கட்டாயம் வேண்டும். அத்தகைய வீரர்களை மட்டுமே எங்கள் நாட்டில் அனுமதிப்போம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நிபந்தனை விதித்திருந்தது.
இந்த நிலையில் முகமது ஹபீஸ், முகமது ரிஸ்வான், வஹாப் ரியாஸ், பஹார் ஜமான், முகமது ஹஸ்னைன், ஷதப் கான் ஆகிய 6 வீரர்களுக்கு 3-வது முறையாக நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனையிலும் கொரோனா இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இவர்களுக்கு இரண்டு முறை ‘நெகட்டிவ்’ முடிவு வந்து விட்டதால் பாகிஸ்தான் அணியுடன் விரைவில் இணைய உள்ளனர். இந்த வார இறுதியில் அவர்களை இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்து வருகிறது. தற்போது இந்த 6 வீரர்களும் லாகூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தனிமையில் உள்ளனர்.
தென்ஆப்பிரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்களின் இறுதிச்சடங்குக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என புரோகிதர்கள் மீது இந்து அமைப்பு குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.