2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் சூதாட்டமா? - இலங்கை கிரிக்கெட் வீரர் தரங்காவிடம் விசாரணை


2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் சூதாட்டமா? - இலங்கை கிரிக்கெட் வீரர் தரங்காவிடம் விசாரணை
x
தினத்தந்தி 2 July 2020 1:08 AM GMT (Updated: 2 July 2020 1:08 AM GMT)

உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் ‘மேட்ச் பிக்சிங்’ என்ற சூதாட்டம் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து இலங்கை வீரர் தரங்காவிடம் விசாரணை நடத்தப்பட்டது.

கொழும்பு,

2011-ம் ஆண்டு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சங்கக்கரா தலைமையிலான இலங்கையை தோற்கடித்து 28 ஆண்டுகளுக்கு பிறகு மகுடம் சூடியது.

“2011-ம் ஆண்டு உலக கோப்பையை இலங்கை அணி விற்று விட்டது. சில குரூப்பினர் இதில் ‘பிக்சிங்’ செய்து விட்டனர். இல்லாவிட்டால் இலங்கை அணி வென்றிருக்கும்’ என்று அப்போது இலங்கையின் விளையாட்டுத்துறை மந்திரியாக இருந்த மகிந்தானந்தா அலுத்காமகே சமீபத்தில் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். அவரது குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவை இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சகம் அமைத்தது. புலனாய்வு பிரிவினர் முதலில் மகிந்தானந்தா அலுத்காமகேவிடம் விசாரணை நடத்தினர். அவர் தனது சந்தேகங்களுக்கு வலுசேர்க்கும் சில ஆதாரங்களை சமர்ப்பித்தார்.

2011-ம் ஆண்டு இலங்கை அணியின் தேர்வு குழு தலைவராக இருந்த முன்னாள் வீரர் அரவிந்த டிசில்வாவிடம் விசாரணை குழுவினர் ஏறக்குறைய 6 மணி நேரம் நேற்று முன்தினம் கிடுக்கிடுப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு வெளியே வந்த டி சில்வா கருத்து கூற மறுத்து விட்டார்.

டி சில்வாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாடிய அனைத்து இலங்கை வீரர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இறுதி ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி 20 பந்தில் 2 ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆன உபுல் தரங்கா நேற்று விசாரணை கமிட்டியின் முன் ஆஜரானார். அவரிடம் 2 மணிநேரம் விசாரணை நடந்தது.

பின்னர் 35 வயதான தரங்கா நிருபர்களிடம் கூறுகையில், ‘குற்றச்சாட்டு தொடர்பாக சில கேள்விகளை அதிகாரிகள் கேட்டனர். அதற்கு எனது பதிலை அளித்தேன்.’ என்று கூறி விட்டு மேற்கொண்டு எந்த விவரங்களையும் சொல்லாமல் நழுவினார். அடுத்து முன்னாள் கேப்டன்கள் சங்கக்கரா, மஹேலா ஜெயவர்த்தனே ஆகியோரையும் விசாரணைக்கு வரும்படி புலனாய்வு கமிட்டி அழைத்துள்ளது.

விளையாட்டில் ‘மேட்ச் பிக்சிங்’கில் ஈடுபட்டால் கிரிமினல் குற்றத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க இலங்கையில் சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ரூ.4 கோடி அபராதம் மற்றும் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Next Story