கிரிக்கெட்

பாகிஸ்தான் அணியின் கேப்டனாக நீடிக்க சர்ப்ராஸ் அகமதுவுக்கு வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும் - இன்ஜமாம் உல்-ஹக் கருத்து + "||" + Sarfraz Ahmed should have given the chance to remain as Pakistan captain - Inzamam ul-Haq

பாகிஸ்தான் அணியின் கேப்டனாக நீடிக்க சர்ப்ராஸ் அகமதுவுக்கு வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும் - இன்ஜமாம் உல்-ஹக் கருத்து

பாகிஸ்தான் அணியின் கேப்டனாக நீடிக்க சர்ப்ராஸ் அகமதுவுக்கு வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும் - இன்ஜமாம் உல்-ஹக் கருத்து
பாகிஸ்தான் அணியின் கேப்டனாக நீடிக்க சர்ப்ராஸ் அகமதுவுக்கு இன்னும் காலஅவகாசம் வழங்கியிருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் இன்ஜமாம் உல்-ஹக் கூறியுள்ளார்.
லாகூர்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான இன்ஜமாம் உல்-ஹக் டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் மற்றும் வீரர்கள் நெருக்கடியுடன் விளையாடினர். சிறப்பாக ஆடாவிட்டால் அணியில் இருந்து கழற்றி விட்டு விடுவார்கள் என்ற அச்சம் அவர்களின் மனதில் தொற்றி இருந்தது. இத்தகைய சூழல் உருவாக்கப்படுவது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.


சர்ப்ராஸ் அகமது கேப்டனாக பாகிஸ்தான் அணிக்கு சாம்பியன்ஸ் கோப்பையை வென்றுத்தந்தார். 20 ஓவர் போட்டியில் அணியை ‘நம்பர் ஒன்’ இடத்திற்கு அழைத்து சென்றார். மேலும் பல குறிப்பிடத்தக்க வெற்றிகள் அவரது தலைமையில் கிடைத்தது. கேப்டனாக அவர் தொடர்ந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு வந்தார். அனுபவத்திலும், தவறுகளில் இருந்தும் கற்றுக்கொண்டு கேப்டனாக மேம்பட்டு வந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி விட்டனர். அவர் கேப்டனாக நீடிப்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்னும் போதிய வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். அவசரப்பட்டு ஓரங்கட்டி விட்டனர். 1992-ம் ஆண்டு பாகிஸ்தான் அணி உலக கோப்பையை வென்ற போது கூட, இம்ரான் கான் ஒரு கேப்டனாக 3-வது முயற்சியில் தான் சாதித்து காட்டினார் என்பதை மறந்து விடக்கூடாது.

பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாபர் அசாமை, இந்திய கேப்டன் விராட் கோலியுடன் ஒப்பிடுவது குறித்து கேட்கிறீர்கள். விராட் கோலி 10 ஆண்டுகள் விளையாடி விட்டார். பாபர் அசாம் சர்வதேச கிரிக்கெட் களத்திற்குள் நுழைந்து 3 அல்லது 4 ஆண்டுகள் தான் ஆகிறது. இவர்கள் இருவரின் தொடக்க கால ஆட்டங்களை ஒப்பிட்டு பார்த்தால் கோலியை விட பாபர் அசாமே முன்னணியில் இருப்பார். இன்னும் சில ஆண்டுகளில் பாபர் அசாம் நிறைய சாதனைகளை படைத்து விடுவார். இதுவரை செய்துள்ளதை விட அவரால் அதிகமாக சாதிக்க முடியும்.

இவ்வாறு இன்ஜமாம் உல்-ஹக் கூறினார்.

2019-ம் ஆண்டு உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி மயிரிழையில் லீக் சுற்றுடன் வெளியேறியது. இதையடுத்து கேப்டன்ஷிப்பில் இருந்து சர்ப்ராஸ் அகமது நீக்கப்பட்டார். தேர்வு குழு தலைவர் பொறுப்பில் இருந்து இன்ஜமாம் உல்-ஹக் விலகினார். பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் கேப்டனாக அசார் அலியும், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டனாக பாபர் அசாமும், தேர்வு குழு தலைவர் மற்றும் பயிற்சியாளராக மிஸ்பா உல்-ஹக்கும் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.