உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் சூதாட்டத்திற்கான ஆதாரம் இல்லை: வழக்கு விசாரணையை கைவிட்டது, இலங்கை


உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் சூதாட்டத்திற்கான ஆதாரம் இல்லை: வழக்கு விசாரணையை கைவிட்டது, இலங்கை
x
தினத்தந்தி 4 July 2020 1:00 AM GMT (Updated: 4 July 2020 1:00 AM GMT)

உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் சூதாட்டம் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் வழக்கு விசாரணையை இலங்கை புலனாய்வு பிரிவு கைவிட்டது.

கொழும்பு,

கடந்த 2011-ம் ஆண்டு நடந்த 10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும், இலங்கையும் இறுதிசுற்றுக்கு முன்னேறின. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரங்கேறிய பரபரப்பான இறுதி ஆட்டத்தில் டோனி தலைமையிலான இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சங்கக்கரா தலைமையிலான இலங்கையை வீழ்த்தி 28 ஆண்டுகளுக்கு பிறகு வாகை சூடியது. இலங்கை அணியில் துணை கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே சதம் அடித்தும் பலன் இல்லாமல் போனது.

இந்த ஆட்டத்தில் இலங்கை அணி விளையாடிய விதம் குறித்து 9 ஆண்டுகளுக்கு பிறகு சந்தேகம் கிளப்பிய இலங்கை முன்னாள் விளையாட்டுத்துறை மந்திரி மகிந்தானந்தா அலுத்காமகே, ‘சில குழுவினர் ஆட்டத்தை ‘பிக்சிங்’ செய்து விட்டனர். இல்லாவிட்டால் இலங்கை அணி வெற்றி பெற்றிருக்கும்’ என்று திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை கூறினார். அத்துடன் இறுதி ஆட்டத்தில் மட்டும் 4 வீரர்களை மாற்றுவதற்கு அவசியம் என்ன? என்றும் கேள்வி எழுப்பினார்.

அவரது சூதாட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவை இலங்கை விளையாட்டுத்துறை அமைத்தது. இந்த பிரிவினர் அலுத்காமகே மற்றும் அப்போது இலங்கை அணியின் தேர்வு குழு தலைவராக இருந்த அரவிந்த டி சில்வா, கேப்டனாக செயல்பட்ட சங்கக்கரா, தொடக்க வீரர் உபுல் தரங்கா ஆகியோரை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். இதில் சங்கக்கராவிடம் மட்டும் ஆட்டம் மற்றும் வியூகங்கள் தொடர்பாக கிட்டத்தட்ட 10 மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர். இறுதி ஆட்டத்தில் சதம் அடித்த ஜெயவர்த்தனேவும் சிறப்பு புலனாய்வு அலுவலகத்துக்கு நேற்று சென்றார். ஆனால் அவரது வாக்குமூலத்தை ஏற்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

இந்த நிலையில் இறுதிப்போட்டியில் இலங்கை வீரர்கள் யாரும் ‘மேட்ச் பிக்சிங்’ என்ற சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் விசாரணையை கைவிட சிறப்பு புலனாய்வு குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து விசாரணை அதிகாரிகள் கூறுகையில், ‘அணித் தேர்வு மற்றும் இறுதிப்போட்டியில் வீரர்கள் மாற்றங்கள் குறித்து 2 வீரர்களிடமும், தேர்வு குழு தலைவரிடமும் விசாரணை நடத்தினோம். அதற்கு அவர்கள் அளித்த விளக்கம் திருப்தி அளிக்கிறது. அவர்கள் தவறு செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. இத்துடன் வழக்கு விசாரணையை முடித்து விட்டோம்’ என்றார்.

‘வீரர்களிடம் மேலும் விசாரணை நடத்துவதற்கு எந்த காரணமும் இல்லை. எல்லா வீரர்களுக்கும் சம்மன் அனுப்பி வாக்குமூலத்தை பெறுவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். எங்களது விசாரணை அறிக்கையை இலங்கை விளையாட்டுத்துறை செயலாளருக்கு அனுப்பி வைப்போம்’ என்று சிறப்பு விசாரணை குழுவின் பொறுப்பு அதிகாரி ஜெகத் பொன்சேகா தெரிவித்தார்.

இதற்கிடையே, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஊழல் தடுப்பு பிரிவு வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டி நேர்மையான முறையில் நடந்தது. இதில் சந்தேகப்படுவதற்கு எங்களிடம் எந்த காரணமும் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக அந்த சமயத்தில் ஐ.சி.சி.க்கு கடிதம் அனுப்பியதாக இலங்கை முன்னாள் விளையாட்டுத்துறை மந்திரி கூறியிருந்தார். ஆனால் அத்தகைய கடிதம் எதுவும் எங்களுக்கு வரவில்லை’ என்று கூறப்பட்டு உள்ளது.

Next Story