‘ஐ.பி.எல். கிரிக்கெட் இல்லாமல் இந்த ஆண்டை நிறைவு செய்ய விரும்பவில்லை’ கங்குலி பேட்டி


‘ஐ.பி.எல். கிரிக்கெட் இல்லாமல் இந்த ஆண்டை நிறைவு செய்ய விரும்பவில்லை’ கங்குலி பேட்டி
x
தினத்தந்தி 8 July 2020 10:45 PM GMT (Updated: 2020-07-09T00:55:03+05:30)

‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இல்லாமல் இந்த ஆண்டை நிறைவு செய்ய விரும்பவில்லை’ என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.

புதுடெல்லி, -

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு நேற்று 48-வது வயது பிறந்தது. இதையொட்டி இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், கேப்டன் விராட்கோலி, தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், முன்னாள் வீரர்கள் ஷேவாக், வி.வி.எஸ்.லட்சுமண், யுவராஜ் சிங், முகமது கைப் மற்றும் சுரேஷ்ரெய்னா, ஹர்பஜன்சிங் உள்பட பலரும் சமூக வலைதளம் மூலம் கங்குலிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்திய கிரிக்கெட் வாரியம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்துள்ளனர்.

‘களத்துக்கு உள்ளே அமைந்தது போன்று நமது கூட்டணி களத்துக்கு வெளியேயும் வலுவாக தொடரும் என்று நம்புகிறேன். இது சிறப்பான வருடமாக உங்களுக்கு அமைய வாழ்த்துகள்’ என்று தெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்.

பிறந்த நாளை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்றி இந்த ஆண்டை (2020) நிறைவு செய்ய நாங்கள் விரும்பவில்லை. ஐ.பி.எல். போட்டியை இந்தியாவில் நடத்துவது தான் எங்களது முன்னுரிமையாகும். 35 முதல் 40 நாட்கள் ஏதுவாக கிடைத்தால் கூட இந்தியாவில் இந்த போட்டியை நடத்தி விடுவோம் குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள் ஐ.பி.எல். போட்டியை நடத்த முடியுமா என்பதை முதலில் பார்க்க வேண்டும். இரண்டாவதாக இந்தியாவில் நடத்துவது பற்றி முடிவு செய்ய வேண்டும்.

இந்தியாவில் நடத்துவது எளிதல்ல

இந்தியாவில் ஐ.பி.எல். போட்டியை நடத்த சாத்தியமில்லை என்றால் அடுத்தபடியாக வெளிநாட்டில் நடத்துவது குறித்து சிந்திக்க வேண்டும். எங்கு நடத்த போகிறோம் என்பதை கவனிக்க வேண்டியது அவசியமானதாகும். ஏனெனில் வெளிநாடு சென்றால் அணி நிர்வாகத்துக்கும், இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் அதிகம் செலவாகும். நமது பணத்தை அன்னிய செலாவணியாக மாற்றுவதற்கும் அதிக பணம் பிடிக்கும். எனவே எல்லா விஷயங்களையும் நாங்கள் கூர்ந்து கண்காணித்து வருகிறோம். ஆனாலும் இந்த போட்டியை நடத்துவதில் நாங்கள் மிகவும் முனைப்புடன் இருக்கிறோம்.

20 ஓவர் உலக கோப்பை போட்டி குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) என்ன முடிவு எடுக்கபோகிறது என்பது இன்னும் எங்களுக்கு தெரியாது. மீடியாக்கள் மூலமாக வெவ்வேறு விஷயங்களை கேள்விப்பட்டு வருகிறோம். ஐ.சி.சி., போர்டு உறுப்பினர்களுக்கு அதிகாரபூர்வமாக சொல்கிற வரை என்ன நடக்கும் என்பது தெரியாது. மும்பை, கொல்கத்தா, சென்னை, டெல்லி ஆகிய நகரங்களை அடிப்படையாக கொண்டவை தான் ஐ.பி.எல். போட்டியில் பெரிய அணிகளாக உள்ளன. தற்போது இந்த நகரங்களில் நிலவும் சூழ்நிலையை பார்க்கையில் இங்கு கிரிக்கெட் போட்டியை நடத்த முடியும் என்று சொல்ல முடியாது. இந்த தருணத்தில், ஐ.பி.எல். போட்டியை இந்தியாவில் நடத்துகிறோம் என்று சொல்வது எளிதான காரியம் அல்ல.

இவ்வாறு கங்குலி கூறினார்.

Next Story