கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வலுவான முன்னிலை பெற இங்கிலாந்து அணி போராட்டம் + "||" + The first Test against the West Indies, the England team struggle

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வலுவான முன்னிலை பெற இங்கிலாந்து அணி போராட்டம்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வலுவான முன்னிலை பெற இங்கிலாந்து அணி போராட்டம்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வலுவான முன்னிலை பெற இங்கிலாந்து வீரர்கள் போராடி வருகிறார்கள்.
சவுதம்டன்,

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நடந்து வருகிறது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து 204 ரன்னில் சுருண்டது. ஜாசன் ஹோல்டர் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.


அடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி கிரேக் பிராத்வெய்ட் (65 ரன்), ஷேன் டாவ்ரிச் (61 ரன்) ஆகியோரது அரைசதங்களின் உதவியுடன் 318 ரன்கள் சேர்த்து ‘ஆல்-அவுட்’ ஆனது. பின்னர் 114 ரன்கள் பின்தங்கிய நெருக்கடியுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 15 ரன் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 4-வது நாளான நேற்று இங்கிலாந்து வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்திய தொடக்க ஆட்டக்காரர்களான ரோரி பர்ன்சும், டாம் சிப்லியும் முதல் விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் அமைத்து தந்தனர். பர்ன்ஸ் 42 ரன்களில் கேட்ச் ஆனார்.

அரைசதத்தை எட்டிய டாம் சிப்லி (50 ரன், 164 பந்து, 4 பவுண்டரி) ஷனோன் கேப்ரியலின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டாவ்ரிச்சிடம் சிக்கினார். முன்னதாக இதே ஓவரின் 2-வது பந்தில் சிப்லி போல்டு ஆனார். ஆனால் கேப்ரியல் தனது காலை மயிரிழையில் கிரீசுக்கு வெளியே வைத்து வீசியது தெரியவந்ததால் ‘நோ-பால்’ என்று நடுவர் அறிவித்தார். ஆனாலும் இந்த அதிர்ஷ்டத்தை பயன்படுத்திக்கொள்ள தவறி சிப்லி அதே ஓவரிலேயே வீழ்ந்தார். அடுத்து வந்த ஜோ டென்லி தனது பங்குக்கு 29 ரன்கள் எடுத்தார்.

இதைத் தொடர்ந்து இணைந்த ஜாக் கிராவ்லியும், கேப்டன் பென் ஸ்டோக்சும் அணியை தூக்கி நிறுத்தும் போராட்டத்தில் இறங்கினர். 89 ஓவர் முடிந்திருந்த போது இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்து, மொத்தம் 135 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. அப்போது ஜாக் கிராவ்லி 72 ரன்களுடனும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 46 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ரோஸ்டன் சேஸ் 2 விக்கெட்டும், கேப்ரியல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.