‘டி.ஆர்.எஸ். முறைப்படி பந்து ஸ்டம்பு மீது பட்டாலே அவுட் கொடுக்க வேண்டும்’ - தெண்டுல்கர் வலியுறுத்தல்


‘டி.ஆர்.எஸ். முறைப்படி பந்து ஸ்டம்பு மீது பட்டாலே அவுட் கொடுக்க வேண்டும்’ - தெண்டுல்கர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 July 2020 1:28 AM GMT (Updated: 13 July 2020 1:28 AM GMT)

டி.ஆர்.எஸ். முறைப்படி பந்து ஸ்டம்பு மீது பட்டாலே அவுட் கொடுக்க வேண்டும் என்று தெண்டுல்கர் வலியுறுத்தி உள்ளார்.

மும்பை, 

சர்வதேச கிரிக்கெட்டில் நடுவர்கள் அளிக்கும் தீர்ப்புகளில் தவறுகளை சரி செய்வதற்காக டி.ஆர்.எஸ். என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட் வழங்குவதில் இப்போது இந்த தொழில்நுட்பமே பிரதானமாக இருக்கிறது.

பந்து பேட்ஸ்மேனின் காலுறையில் பட்டு அப்பீலுக்கு செல்லும் போது, டி.வி. ரீப்ளே மூலம் உன்னிப்பாக ஆராயப்படுகிறது. இதில் பந்து நடு ஸ்டம்பு மீதோ அல்லது மற்ற இரு ஸ்டம்புகளின் வெளி விளிம்பில் இருந்து பாதிக்கு மேலாக படுவதாக தெரிந்தாலோ எல்.பி.டபிள்யூ. வழங்கப்படுகிறது. மாறாக ஆப் மற்றும் லெக் ஸ்டம்பின் மீது 50 சதவீதத்திற்கும் குறைவாக பந்து படுவது போல் தென்பட்டாலோ அல்லது பெய்ல்சின் மீது உரசுவதாக தெரிந்தாலோ களத்தில் உள்ள நடுவரின் முடிவுக்கே விடப்படுகிறது. அதாவது களத்தில் உள்ள நடுவர் முதலில் அவுட் கொடுத்திருந்தால் அது அவுட்டாக எடுத்துக் கொள்ளப்படும். நாட்-அவுட் என்று கூறியிருந்தால் நாட்-அவுட் என்று அறிவிக்கப்படும். இது சில சமயம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே டி.ஆர்.எஸ்.-ல் குறிப்பிட்ட பகுதியில் மாற்றம் செய்ய வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை (ஐ.சி.சி.) வலியுறுத்தியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் பிரையன் லாராவுடன் நடந்த கலந்துரையாடலின் போது தெண்டுல்கர் கூறியதாவது:-

பந்து எத்தனை சதவீதம் ஸ்டம்பை தாக்குகிறது என்பது ஒரு பொருட்டே அல்ல. டி.ஆர்.எஸ். நுட்பத்தில் பந்து ஸ்டம்பு மீது படுவதாக காட்டினாலே பேட்ஸ்மேனுக்கு அவுட் கொடுக்கப்பட வேண்டும். இந்த நோக்கத்துக்காகத் தான் கிரிக்கெட்டில் தொழில்நுட்பமே பயன்படுத்தப்படுகிறது. நடுவரின் தீர்ப்பில் திருப்தி அளிக்காத போது தான் பேட்ஸ்மேனோ அல்லது பந்து வீச்சாளரோ டி.ஆர்.எஸ்.-ன்படி முறையீடு செய்கிறார். 3-வது நடுவரின் கவனத்துக்கு செல்லும் போது அவர் தொழில்நுட்பத்தை ஆதாரமாக எடுத்து முடிவுக்கு வர வேண்டும். அவுட் அல்லது நாட்-அவுட் ஆகிய இரண்டில் ஒன்றை மட்டுமே அவர் தீர்ப்பாக வழங்க வேண்டுமே தவிர இடைப்பட்ட முடிவுக்கு (களநடுவரின் முடிவுக்கு விடுவது) வரக்கூடாது. தொழில்நுட்பம் எப்போதும் 100 சதவீதம் துல்லியமாக இருக்காது. மனிதர்களின் தீர்ப்புகளும் அது போன்றது தான்.

இவ்வாறு தெண்டுல்கர் கூறினார்.


Next Story