இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி


இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி
x
தினத்தந்தி 13 July 2020 1:46 AM GMT (Updated: 13 July 2020 1:46 AM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.

சவுதம்டன், 

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் கடந்த 8-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 204 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 318 ரன்களும் எடுத்தன. 114 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 4-வது நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 284 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து எஞ்சிய இரு விக்கெட்டையும் இழந்து 313 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணி கடைசி 64 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை தாரை வார்த்தது குறிப்பிடத்தக்கது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஷனோன் கேப்ரியல் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 200 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி கிரேக் பிராத்வெய்ட் (4 ரன்), ஷமார் புரூக்ஸ் (0), ஷாய் ஹோப் (9 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை வேகமாக பறிகொடுத்து தொடக்கத்தில் திணறியது. இதற்கு மத்தியில் ஜான் கேம்ப்பெல் காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் வெளியேறினார். அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

இந்த நெருக்கடியான சூழலில் ரோஸ்டன் சேசும், ஜெர்மைன் பிளாக்வுட்டும் கைகோர்த்து அணியை வீழ்ச்சியின் பிடியில் இருந்து மீட்டு, வெற்றிப்பாதைக்கு திருப்பினர். ஸ்கோர் 100 ரன்களை எட்டிய போது ரோஸ்டன் சேஸ் (37 ரன்) ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த டாவ்ரிச் 20 ரன்னில் நடையை கட்டினார்.

மறுமுனையில் மனஉறுதியுடன் போராடி இங்கிலாந்து பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த பிளாக்வுட் வெற்றியை நெருங்கிய சமயத்தில் 95 ரன்களில் (154 பந்து, 12 பவுண்டரி) ஆட்டம் இழந்தார்.

முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 64.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 200 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் ஜாசன் ஹோல்டர் 14 ரன்களுடனும், ஜான் கேம்ப்பெல் 8 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். இந்த போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 40 புள்ளிகள் கிடைத்தது.

கொரோனா அச்சத்துக்கு இடையே நடந்த டெஸ்டில் பிரமிக்கத்தக்க வெற்றியை ஈட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டி கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 16-ந்தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.


Next Story