இந்திய அணியின் தேர்வு குழு கூட்டத்தை டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் - இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி


இந்திய அணியின் தேர்வு குழு கூட்டத்தை டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் - இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி
x
தினத்தந்தி 13 July 2020 10:15 PM GMT (Updated: 13 July 2020 7:04 PM GMT)

இந்திய அணியின் தேர்வு குழு கூட்டத்தை டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி இன்ஸ்டாகிராம் உரையாடலில் பேசுகையில், ‘இந்திய அணியின் தேர்வு குழு கூட்டத்தை டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும். அப்படி செய்தால் எந்தவொரு தேர்வாளர் எந்த வீரரின் பெயரை எந்த காரணத்துக்காக தேர்வு செய்கிறார் என்பதை எல்லோரும் பார்க்க முடியும். அத்துடன் அணி தேர்வு நியாயமானதா? இல்லையா? என்பதை ஆய்வு செய்யவும் உதவிகரமாக இருக்கும். வழக்கமாக தேர்வு செய்யப்படாத வீரர்கள் ஏன்? புறக்கணிக்கப்பட்டேன் என்று கேட்டால் தேர்வாளர்கள் வேறு யாரையாவது காரணம் சொல்லுவார்கள். தேர்வு விஷயத்தில் யார் மீதும் குறை சொல்லாமல் இருக்க வேண்டுமென்றால் தேர்வு குழு கூட்டத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டியது அவசியமானதாகும். என்று தெரிவித்தார்.

* வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆடும் லெவன் அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் இந்த நீக்கம் கோபத்தையும், வேதனையையும் அளிக்கிறது என்று வருத்தம் தெரிவித்து இருந்தார். வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் அவருக்கு இடம் கிடைக்குமா? என்று இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட்டிடம் கேட்ட போது, ‘இங்கிலாந்து அணியில் எதுவும் யாருக்கும் என்று கொடுக்கப்பட்டதில்லை. வீரர்கள் தங்களுக்கான இடத்தை பிடிக்க அவர்கள் தான் போட்டியிட வேண்டும். அணி தேர்வில் எல்லா விஷயங்களும் கருத்தில் கொள்ளப்படும்’ என்று பதிலளித்தார்.

* எச்சில் மூலம் கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதால் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பந்தை பளபளக்க வைக்க எச்சிலை பயன்படுத்த தற்காலிகமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்து இருக்கிறது. இதனால் இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் பவுலர்கள் வியர்வையை பயன்படுத்தி தான் பந்தை பளபளப்பாக்க முயற்சித்தனர். இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் கருத்து தெரிவிக்கையில், ‘கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் ஜோப்ரா ஆர்ச்சர், மார்க்வுட் ஆகியோரின் பந்து வீச்சை பார்க்கையில் தற்போது பழைய பந்தில் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதை பவுலர்கள் மறந்து விட வேண்டியது தான் என்பது போல் தெரிந்தது. பந்தை தேய்க்க எச்சிலை பயன்படுத்தக்கூடாது என்ற தடை இருக்கும் வரை பவுலர்களுக்கு வழக்கத்தை விட கடினமானதாகவே இருக்கும்’ என்றார்.

* கடந்த ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சவுராஷ்டிரா அணியில் முக்கிய பங்கு வகித்த நட்சத்திர வீரர் ஷெல்டன் ஜாக்சன் புதுச்சேரி அணிக்காக விளையாட ஒப்பந்தமானது ஏன்? என்பது குறித்து கூறுகையில், ‘தொழில்முறை ஆட்டத்தை தொடங்குவதற்கு எனக்கு இது முதல் படிக்கட்டாகும். நான் சிறப்பாக செயல்பட்டால் பணம் தானாக கிடைக்கும். இந்த வருடம் நான் அதிக பணம் பார்க்கவில்லை. நான் சிறப்பாக விளையாடினால் பணத்துக்கான வழி நிச்சயம் திறக்கும். சிறிய அணிக்காக விளையாடினால் அதிக கவனம் பெற முடியும். சவுராஷ்டிரா போல் அடுத்த 5 ஆண்டில் புதுச்சேரியும் பெரிய அணியாக உருவெடுக்கும்’ என்றார்.

Next Story