உலக கோப்பையை வென்று ஓராண்டு நிறைவு: இறுதிஆட்டத்தை இப்போது பார்த்தாலும் பதற்றம் தொற்றிக்கொள்கிறது - இங்கிலாந்து கேப்டன் மோர்கன் சொல்கிறார்


உலக கோப்பையை வென்று ஓராண்டு நிறைவு: இறுதிஆட்டத்தை இப்போது பார்த்தாலும் பதற்றம் தொற்றிக்கொள்கிறது - இங்கிலாந்து கேப்டன் மோர்கன் சொல்கிறார்
x
தினத்தந்தி 14 July 2020 11:00 PM GMT (Updated: 2020-07-15T01:36:53+05:30)

சூப்பர் ஓவருக்கு மத்தியில் வென்ற 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தை இப்போது பார்த்தாலும் பதற்றம் தொற்றிக்கொள்கிறது என்று இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறியுள்ளார்.

லண்டன்,

இங்கிலாந்தில் 2019-ம் ஆண்டு நடந்த 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிஆட்டத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. கடந்த ஆண்டு ஜூலை 14-ந்தேதி லண்டன் லார்ட்சில் அரங்கேறிய இறுதிசுற்றில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் மோதின. முதலில் பேட் செய்த நியூசிலாந்து 8 விக்கெட்டுக்கு 241 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியும் 50 ஓவர்களில் 241 ரன்கள் மட்டுமே எடுத்ததால் பரபரப்பான இந்த ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்ட போது, அந்த அணி 14 ரன்களே எடுத்தது.

வெற்றியை தீர்மானிக்க கொண்டு வரப்பட்ட சூப்பர் ஓவரில் இரு அணிகளும் தலா 15 ரன்கள் எடுத்ததால் மறுபடியும் சமநிலை ஏற்பட்டது. இதையடுத்து அதிக பவுண்டரி விளாசிய அணி என்ற வகையில் இங்கிலாந்து முதல்முறையாக உலக கோப்பையை உச்சிமுகர்ந்தது. பவுண்டரி எண்ணிக்கையின்படி வெற்றியாளரை முடிவு செய்யும் விதிமுறை கடும் விமர்சனத்திற்கு உள்ளானதால் அந்த விதிமுறையை சில மாதங்களில் ஐ.சி.சி. நீக்கி விட்டது.

கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் திரில்லிங்காக அமைந்த அந்த இறுதிப்போட்டி நடந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்று விட்டது. இதை நினைவு கூர்ந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் கிரிக்கெட் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கொரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடு காரணமாக கடந்த 4 மாதங்கள் கொஞ்சம் சவாலாக இருக்கிறது. அதே நேரத்தில் வீட்டில் ஓய்வில் இருந்தபடி 2019-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டியை பார்க்கும் வாய்ப்பையும் இது உருவாக்கி தந்திருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் டி.வி.டி. மூலம் மூன்று முறை உலக கோப்பை இறுதிப்போட்டியை முழுமையாக பார்த்து விட்டேன். இறுதி ஆட்டத்தை முதல்முறையாக ரசித்து கண்டுகளித்தேன். இதுவும் வியப்புக்குரிய ஒரு அனுபவம் தான். ஆனாலும் இந்த போட்டியை ஒவ்வொரு தடவையும் நாள் முழுவதும் உட்கார்ந்து முழுமையாக பார்க்கும்போது இன்னும் எனக்குள் பதற்றம் ஏற்படுகிறது. அந்த அளவுக்கு இந்த ஆட்டம் இடைவிடாது ‘நீயா-நானா’ என்று பரபரப்பும், நெருக்கடியும் நிறைந்ததாக நகர்ந்தது. இத்தகைய ஆட்டத்தில் நானும் பங்கெடுத்தது பெருமை அளிக்கிறது.

இந்த இறுதிப்போட்டியை கிரிக்கெட்டை விட பெரியது என்று சொல்வேன். இங்கிலாந்து விளையாட்டு வரலாற்றில் மறக்க முடியாத நாட்களில் ஒன்று. இந்த வெற்றி நீண்ட நாட்கள் மனதில் நிலைத்து நிற்கும்.

இந்த ஆட்டத்தை பொறுத்தவரை ஒரே ஒரு கட்டத்தில் மட்டுமே உலக கோப்பையை நம்மால் வெல்ல முடியுமா? என்ற சந்தேகம் வந்தது. அது ஆட்டத்தின் 49-வது ஓவர். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் நீஷம் ஒரு பந்தை வேகம் குறைத்து வீசினார். அப்போது களத்தில் நின்ற எங்கள் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் (மொத்தம் 84 ரன் குவித்து ஆட்டநாயகன் விருது பெற்றார்) பந்தை ‘லாங் ஆன்’ திசையில் தூக்கியடித்தார்.

பந்து மேல்வாக்கில் பறந்ததே தவிர அதிக தூரத்துக்கு செல்லவில்லை. ஒரு வினாடி, ஸ்டோக்ஸ் அவுட் ஆகப்போகிறார், இத்துடன் நமது கதை முற்றிலும் முடிந்து விட்டது என்று தான் நினைத்தேன். ஏனெனில் அப்போது வெற்றிக்கு 22 ரன்கள் தேவையாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த பந்து (எல்லைக்கோடு அருகே நின்ற டிரென்ட் பவுல்ட் பந்தை பிடித்து உள்ளே தூக்கிப்போட்டாலும் எல்லைக்கோட்டை மிதித்ததால் சிக்சரானது) சிக்சராக மாறியது.

எந்த ஒரு அணியும் 50 ஓவர் உலக கோப்பையை வென்ற பின்னர் தொடர்ச்சியாக 20 ஓவர் உலக கோப்பையை வென்றதில்லை. அந்த சாதனையை படைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். வெளிநாட்டில் நடக்க இருக்கும் அடுத்த இரண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் ஏதாவது ஒன்றை வென்றாலும் நம்ப முடியாத ஒன்றாக இருக்கும். இரண்டு 20 ஓவர் உலக கோப்பையையும் கைப்பற்றினால் அது 50 ஓவர் உலக கோப்பையை வென்றதை விட மகத்தான சாதனையாக அமையும்.

இவ்வாறு மோர்கன் கூறினார்.

Next Story