வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சரிந்து மீண்டது இங்கிலாந்து


வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சரிந்து மீண்டது இங்கிலாந்து
x
தினத்தந்தி 16 July 2020 10:15 PM GMT (Updated: 16 July 2020 9:16 PM GMT)

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி சரிவில் இருந்து மீண்டது.

மான்செஸ்டர்,

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நேற்று தொடங்கியது. இங்கிலாந்து அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க்வுட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஜோப்ரா ஆர்ச்சர், ஜோ டென்லி நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக கேப்டன் ஜோ ரூட், ஸ்டூவர்ட் பிராட், சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ் அணிக்கு திரும்பினர்.

மழையால் 1½ மணிநேரம் தாமதமாக தொடங்கிய இந்த டெஸ்டில் ‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர், வானிலையை கருத்தில் கொண்டு முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

இதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி தடுமாறியது. ரோரி பர்ன்ஸ் 15 ரன்னிலும், ஜாக் கிராவ்லி ரன் ஏதுமின்றியும் ரோஸ்டன் சேசின் சுழலில் சிக்கினர். சற்று தாக்குப்பிடித்து ஆடிய கேப்டன் ஜோ ரூட் (23 ரன்), அல்ஜாரி ஜோசப்பின் பந்து வீச்சில் ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். இதன் பின்னர் கைகோர்த்த டாம் சிப்லியும், பென் ஸ்டோக்சும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். 66 ஓவர் முடிந்திருந்த போது இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது டாம் சிப்லி 68 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 40 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர்.


Next Story