கிரிக்கெட்

‘தென்ஆப்பிரிக்க அணியில் சக வீரர்களே பாகுபாடு காட்டினர்’ - தனிமையை உணர்ந்ததாக நிதினி பரபரப்பு குற்றச்சாட்டு + "||" + Fellow players on the South African team discriminated Nithini is accused of sensationalism for feeling lonely

‘தென்ஆப்பிரிக்க அணியில் சக வீரர்களே பாகுபாடு காட்டினர்’ - தனிமையை உணர்ந்ததாக நிதினி பரபரப்பு குற்றச்சாட்டு

‘தென்ஆப்பிரிக்க அணியில் சக வீரர்களே பாகுபாடு காட்டினர்’ - தனிமையை உணர்ந்ததாக நிதினி பரபரப்பு குற்றச்சாட்டு
தென்ஆப்பிரிக்க அணியில் சக வீரர்களே பாகுபாடு காட்டியதால் தனிமையை உணர்ந்ததாக நிதினி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
ஜோகன்னஸ்பர்க், 

‘கருப்பின மக்களின் வாழ்க்கை முக்கியம்’ என்ற இயக்கத்திற்கு தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்களில் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில் முன்னாள் வீரர் மகாயா நிதினியும் ஒருவர். 43 வயதான நிதினி தென்ஆப்பிரிக்க அணிக்காக விளையாடிய முதல் கருப்பின வீரர் ஆவார். வேகப்பந்து வீச்சாளரான நிதினி 101 டெஸ்டில் ஆடி 390 விக்கெட்டுகளும், 173 ஒரு நாள் போட்டிகளில் 266 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். 1998-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தென்ஆப்பிரிக்க அணிக்காக விளையாடிய அவர் சக வீரர்களே தன்னிடம் இனவெறி பாகுபாட்டுடன் நடந்து கொண்டதை இப்போது வெளிப்படுத்தியுள்ளார்.

காலிஸ், ஷான் பொல்லாக், டொனால்டு, குளுஸ்னர், கிரேமி சுமித், கிப்ஸ் உள்ளிட்டோருடன் இணைந்து விளையாடியவரான நிதினி அளித்த ஒரு பேட்டியில், ‘எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் எப்போதும் தனிமையையே உணர்ந்தேன். டின்னருக்கு சாப்பிட போகலாம் என்று எந்த வீரரும் எனது அறைக்கு வந்து அழைக்கமாட்டார்கள். இத்தனைக்கும் என் முன்னால் தான் திட்டம் போடுவார்கள். ஆனால் கிளம்பும் போது என்னை தவிர்த்து விடுவார்கள். சாப்பிடும் அறைக்கு சென்றாலும் என் அருகில் உட்கார மாட்டார்கள். நாங்கள் அனைவரும் ஒரே மாதிரியான சீருடை அணிகிறோம். ஒன்றாக விளையாடுகிறோம், பயிற்சி எடுக்கிறோம், ஒரே தேசிய கீதத்தை படிக்கிறோம். ஆனாலும் சக வீரர்களின் இத்தகைய பாகுபாட்டை கடந்து தான் சாதிக்க வேண்டி இருந்தது. இதனால் தான் ஓட்டலில் இருந்து மைதானத்திற்கு புறப்படும் போது சக வீரர்களுடன் பஸ்சில் செல்வதை தவிர்த்து நான் ஓடியே அங்கு செல்வேன். நான் ஏன் இவ்வாறு செய்கிறேன் என்று வீரர்கள் புரிந்து கொண்டதில்லை. நானும் இது பற்றி அவர்களிடம் பேசியதில்லை. தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெறும் போது எல்லாம் மகிழ்ச்சி தாண்டவமாடும். தோற்கும் போது மட்டும் முதலில் என்னை தான் குறை சொல்வார்கள். ஜூனியர் கிரிக்கெட்டில் விளையாடிய போது எனது மகனும் இனவெறி பிரச்சினையை சந்தித்து இருப்பதாக கூறியுள்ளான்’ என்றார்.