கிரிக்கெட்

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம்? + "||" + Cricket match shifted to UAE?

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம்?

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம்?
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படுகிறது.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட குழுவின் கூட்டம் நேற்று முன்தினம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்தது. இதில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு 4 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள். கொரோனா பிரச்சினையால் தள்ளிவைக்கப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை எப்போது நடத்துவது?, இந்திய அணியின் வருங்கால போட்டி அட்டவணை, உள்ளூர் போட்டிகளை தொடங்குவது உள்பட 11 அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டன.


கொரோனா தாக்கம் எதிரொலியாக காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டு இருக்கும் 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை சொந்த மண்ணில் நடத்தும் ஆசை ஒருபுறம் இருந்தாலும், கொரோனா தொற்று இந்தியாவில் 10 லட்சத்தை தாண்டி விட்டதுடன், இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஐ.பி.எல். போட்டியை நமது நாட்டில் நடத்தும் முடிவை கைவிட்டு வெளிநாட்டில் நடத்துவது தான் பாதுகாப்பானதாக இருக்கும் என்று நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தினார்கள்.

2014-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் வெற்றிகரமாக நடத்திய அனுபவம் இருப்பதால் அந்த நாட்டிலேயே இந்த ஆண்டுக்கான போட்டியையும் நடத்தலாம் என்று யோசனை தெரிவித்தனர். அத்துடன் ஐக்கிய அரபு அமீரத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருப்பதுடன், மைதானம், தங்குமிடம், விமான பயணத்துக்கான வசதி உள்ளிட்ட வாய்ப்புகள் நன்றாக இருப்பதால் அங்கு நடத்தலாம் என்று சுட்டிக்காட்டினார்கள். இதனால் செப்டம்பர் கடைசி வாரத்தில் இருந்து நவம்பர் முதல் வாரத்துக்குள் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். போட்டியை நடத்துவதற்கான திட்டங்களை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த விஷயத்தில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

ஏனெனில் ஆஸ்திரேலியாவில் வருகிற அக்டோபர் 18-ந் தேதி முதல் நவம்பர் 15-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருக்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தலைவிதி குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நாளை முடிவு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு அரசின் அனுமதியை பெற்று ஐ.பி.எல். போட்டி குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சி முகாமை பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தொடங்குவதற்குரிய சூழ்நிலை இல்லாததால் தர்மசாலா அல்லது ஆமதாபாத்தில் நடத்தலாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தர்மசாலா ஸ்டேடியத்தில் தங்கும்வசதி போதுமானதாக இல்லாததால் ஆமதாபாத்தில் பயிற்சி முகாம் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் உயிர் மருத்துவ பாதுகாப்பு வசதி கருதி பயிற்சி முகாமை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றலாமா? என்ற திட்டமும் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை டிசம்பர் மாதம் வரை தொடங்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இதற்கிடையே, ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் அரங்கேற அதிக வாய்ப்பு இருப்பதால் இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளின் நிர்வாகிகள் விமான பயணம் மற்றும் ஓட்டல் அறைகளை தேர்வு செய்வது உள்பட தங்களது ஆயத்த பணிகளை தொடங்கி உள்ளனர்.