இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: பாலோ-ஆனை தவிர்த்தது வெஸ்ட் இண்டீஸ் அணி


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: பாலோ-ஆனை தவிர்த்தது வெஸ்ட் இண்டீஸ் அணி
x
தினத்தந்தி 19 July 2020 9:45 PM GMT (Updated: 19 July 2020 8:03 PM GMT)

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நடந்து வருகிறது.

மான்செஸ்டர்,

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 9 விக்கெட்டுக்கு 469 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 32 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது நாள் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்த நிலையில் 4-வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி கிரேக் பிராத்வெய்ட் (75 ரன்), ஷமார் புரூக்ஸ் (68 ரன்), ரோஸ்டன் சேஸ் (51 ரன்) ஆகியோரது அரைசதங்களின் உதவியுடன் போராடி பாலோ-ஆன் ஆபத்தை (270 ரன்) தவிர்த்தது. 99 ஓவர்களில் அந்த அணி முதல் இன்னிங்சில் 287 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அடுத்து 182 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சை ஆடியது.

முன்னதாக மதிய உணவு இடைவேளைக்கு முந்தைய ஓவரின் போது பந்தை பளபளப்பாக்க இங்கிலாந்து வீரர் டாம் சிப்லி எச்சிலால் தேய்த்தார். கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக கூறி பந்து மீது எச்சிலால் தேய்க்க ஐ.சி.சி. தடை விதித்துள்ள நிலையில் அதை மீறி சிப்லி எச்சிலால் தேய்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது. யதார்த்தமாக இது நடந்து விட்டதாக அவர் நடுவர்களிடம் விளக்கம் அளித்தார். இதனால் எச்சரிக்கையுடன் விடப்பட்டார். பிறகு நடுவர்கள் கிருமிநாசினி பேப்பரால் பந்தை சுத்தப்படுத்தி தொடர்ந்து வீச வைத்தனர்.

Next Story