20 ஓவர் உலக கோப்பை போட்டியை தள்ளிவைப்பது குறித்து ஐ.சி.சி. இன்று முடிவு


20 ஓவர் உலக கோப்பை போட்டியை தள்ளிவைப்பது குறித்து ஐ.சி.சி. இன்று முடிவு
x
தினத்தந்தி 19 July 2020 10:15 PM GMT (Updated: 2020-07-20T01:41:59+05:30)

ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்ட 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் தலைவிதி குறித்து ஐ.சி.சி. இன்று முடிவு செய்கிறது.

துபாய்,

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. ஆனால் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரசின் கோரதாண்டவம் ஆஸ்திரேலியாவையும் விட்டுவைக்கவில்லை. அங்கு நியூசவுத்வேல்ஸ், விக்டோரியா மாகாணங்களில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. அடுத்த சில வாரங்களுக்கு அங்கு பாராளுமன்றம் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு பயணக்கட்டுப்பாடுகளும் அமலில் உள்ளது.

இத்தகைய சூழலில் 16 அணிகளை ஒரே சமயத்தில் வரவழைத்து, கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்துவது என்பது சாத்தியல்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே வெளிப்படையாக தெரிவித்து விட்டது. இதனால் இந்த உலக கோப்பை போட்டி தள்ளிவைக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. ஆனாலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. கடந்த 2 மாதங்களில் ஐ.சி.சி. மூன்று முறை ஆலோசித்தும் உலக கோப்பை விவகாரத்தில் அவசரம் காட்டமாட்டோம் என்று கூறியது.

இந்த நிலையில் ஐ.சி.சி.யின் நிர்வாக குழு உறுப்பினர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்கள். இந்த தடவை 20 ஓவர் உலக கோப்பை போட்டியை தள்ளிவைப்பது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஐ.சி.சி.யின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகளை தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

கொரோனா அச்சத்தால் இந்தியாவில் கடந்த மார்ச் 29-ந்தேதி தொடங்க இருந்த 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. உலக கோப்பை போட்டி தள்ளிப்போனால் அந்தக் காலக்கட்டதில் ஐ.பி.எல். போட்டியை நடத்துவது என்ற முடிவுடன் இந்திய கிரிக்கெட் வாரியம் காத்திருக்கிறது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட்டை சிக்கலின்றி நடத்துவதற்கான முதல்படிக்கட்டு, ஆசிய கோப்பை போட்டியை தள்ளிவைப்பது. ஒரு வழியாக அது நடந்து விட்டது. அடுத்து 20 ஓவர் உலக கோப்பை போட்டியை தள்ளிவைப்பதாக ஐ.சி.சி. அறிவித்த பிறகே ஐ.பி.எல். போட்டிக்கான திட்டமிடலை முழுவீச்சில் முன்னெடுத்து செல்ல முடியும். தற்போதைய நிலைமையில் உலக கோப்பை போட்டியை நடத்த ஆர்வம் இல்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முன்பே கூறிவிட்ட போதிலும் கூட அவர்கள் (ஐ.சி.சி.) முடிவு எடுப்பதை தாமதப்படுத்துகிறார்கள்’ என்று குறிப்பிட்டார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதால் இந்த முறை ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படும் என்று தெரிகிறது. 20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்த ஆண்டு இல்லை என்பது உறுதியானதும், ஐ.பி.எல். சரவெடிக்கு வழிபிறந்து விடும்.

Next Story