வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அபார வெற்றி


வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அபார வெற்றி
x
தினத்தந்தி 20 July 2020 10:15 PM GMT (Updated: 20 July 2020 7:49 PM GMT)

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

மான்செஸ்டர்,

இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 469 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்‘ செய்தது. அதிகபட்சமாக டாம் சிப்லி 120 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 176 ரன்களும் எடுத்தனர்.

3-வது நாள் ஆட்டம் மழையால் முழுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், முதல் இன்னிங்சை தொடர்ந்து ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 4-வது நாளில் 287 ரன்களில் ‘ஆல்அவுட்‘ ஆனது. பின்னர் 182 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கத்துக்கு மாறாக பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோர் களம் இறங்கினார்கள். அதிரடியாக ஆடி வேகமாக ரன் குவிக்கும் நோக்குடன் இருவரும் ஆட்டத்தை தொடங்கினார்கள். ஜோஸ் பட்லர் முதல் ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமலும், ஜாக் கிராவ்லி 11 ரன்னிலும் கெமார் ரோச் பந்து வீச்சில் ‘போல்டு‘ ஆனார்கள். 4-வது நாள் ஆட்டம் முடிவில் இங்கிலாந்து அணி 8 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்து இருந்தது. பென் ஸ்டோக்ஸ் 16 ரன்னுடனும், கேப்டன் ஜோரூட் 8 ரன்னுடனும் களத்தில் நின்றனர்.

இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. பென் ஸ்டோக்ஸ் தொடர்ந்து அடித்து ஆடினார். அவருக்கு பக்கபலமாக நின்ற ஜோரூட் 22 ரன்கள் (33 பந்துகளில்) எடுத்த நிலையில் ‘ரன்அவுட்‘ ஆனார். இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்‘ செய்தது. பென் ஸ்டோக்ஸ் 57 பந்துகளில் 4 பவுண்டரி. 3 சிக்சருடன் 78 ரன்னும், ஆலிவர் போப் 7 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 12 ரன்னும் எடுத்தும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இதனை அடுத்து 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணி 37 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஜான் கேம்ப்பெல் (4 ரன்), கிரேக் பிராத்வெய்ட் (12 ரன்), ஷாய் ஹோப் (7 ரன்), ரோஸ்டன் சேஸ் (6 ரன்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். பிராத்வெய்ட் விக்கெட்டை கிறிஸ் வோக்ஸ் கைப்பற்றினார். மற்ற 3 விக்கெட்டுகளையும் ஸ்டூவர்ட் பிராட் வீழ்த்தினார்.

5-வது விக்கெட்டுக்கு ஜெர்மைன் பிளாக்வுட், ஷமார் புரூக்ஸ்சுடன் இணைந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியை தோல்வியில் இருந்து காப்பாற்ற முயற்சித்தனர். ஸ்கோர் 137 ரன்னாக உயர்ந்த போது ஜெர்மைன் பிளாக்வுட் (55 ரன்கள்) பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

தேநீர் இடைவேளைக்கு பிறகு தொடர்ந்து ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி தோல்வியை தவிர்க்க போராடியது. இங்கிலாந்து அணி தனது அபார பந்து வீச்சின்மூலம் கடும் நெருக்கடி அளித்தது. அடுத்து வந்த ஷேன் டாவ்ரிச் ரன் எதுவும் எடுக்காமலும், நிலைத்து நின்று ஆடிய ஷமார் புரூக்ஸ் 62 ரன்னிலும், கேப்டன் ஜாசன் ஹோல்டர் 35 ரன்னிலும், அல்ஜாரி ஜோசப் 9 ரன்னிலும், கெமார் ரோச் 5 ரன்னிலும் சீரான இடைவெளியில் நடையை கட்டினார்கள்

70.1 ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் அணி 198 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷனோன் கேப்ரியல் ரன் எதுவுமின்றி ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் 24-ந் தேதி தொடங்குகிறது.

Next Story