2-வது டெஸ்டில் வெற்றி: பென் ஸ்டோக்சுக்கு கேப்டன் ஜோ ரூட் புகழாரம்


2-வது டெஸ்டில் வெற்றி: பென் ஸ்டோக்சுக்கு கேப்டன் ஜோ ரூட் புகழாரம்
x
தினத்தந்தி 21 July 2020 9:45 PM GMT (Updated: 21 July 2020 8:14 PM GMT)

இங்கிலாந்து - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்தது.

மான்செஸ்டர்,

இங்கிலாந்து - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்தது. இதில் இங்கிலாந்து நிர்ணயித்த 312 ரன்கள் இலக்கை நோக்கி கடைசி நாளில் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் 70.1 ஓவர்களில் 198 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்ததுடன், தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.

இந்த டெஸ்டில் 3-வது நாள் ஆட்டம் மழையால் முழுமையாக ரத்தான நிலையில் இங்கிலாந்து வீரர் 29 வயதான பென் ஸ்டோக்சின் அமர்க்களமான பேட்டிங்கே இங்கிலாந்தின் வெற்றிப்பாதைக்கு வித்திட்டது. இரு இன்னிங்சிை-யும் சேர்த்து 254 ரன்கள் குவித்தும், 3 விக்கெட் வீழ்த்தியும் கவனத்தை ஈர்த்த பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இதே மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது.

வெற்றிக்கு பிறகு இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறுகையில், ‘உலக கிரிக்கெட்டில் உச்சக்கட்ட திறன் மிக்க வீரராக விளங்கும் பென் ஸ்டோக்ஸ் மீண்டும், மீண்டும் அசத்தி வருவதில் எனக்கு ஆச்சரியம் எதுவுமில்லை. சிறப்பாக செயல்பட்டு வரும் அவருக்கு மேலும் சிறப்பாக செயல்படுங்கள் என்று அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதை நாங்கள் புரிந்து இருக்கிறோம். எந்தவொரு சூழ்நிலையிலும் ஆட்டத்தின் போக்கை அணிக்கு சாதகமாக மாற்றிக் கொடுக்கும் உண்மையான ஆல்-ரவுண்டரான அவர் எங்கள் அணிக்கு மிகவும் மதிப்பு மிக்க வீரர். நம்ப முடியாத அளவுக்கு அபார திறமை கொண்ட அவர் தனது ஆற்றலை மேலும், மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார். அதற்குரிய பலனை நாங்கள் களத்தில் பார்க்கிறோம். அவரால் தொடர்ந்து இதே போன்று விளையாட முடியும்’ என்றார்.

Next Story