இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்


இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 23 July 2020 10:30 PM GMT (Updated: 23 July 2020 8:10 PM GMT)

இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்குகிறது.

மான்செஸ்டர்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சவுதம்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. மான்செஸ்டரில் நடந்த 2-வது டெஸ்டில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதனால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.

இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டு ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

தொடக்க டெஸ்டில் கேப்டன் ஜோ ரூட் இல்லாததாலும், பேட்ஸ்மேன்கள் சொதப்பியதாலும் வீழ்ச்சியை சந்தித்த இங்கிலாந்து அணி 2-வது டெஸ்டில் எழுச்சி பெற்றது. குறிப்பாக ஒரு நாள் முழுவதும் ஆட்டம் மழையால் ரத்தான நிலையிலும் கூட பென் ஸ்டோக்சின் பிரமாதமான பேட்டிங் (176 ரன் மற்றும் 57 பந்தில் 78 ரன்) இங்கிலாந்தின் வெற்றிக்கு அடிகோலியது.

கொரோனா தடுப்பு விதிமுறையை மீறியதால் முந்தைய டெஸ்டில் நீக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் அணியுடன் இணைந்து விட்டார். ஆனால் ஆன்-லைனில் சிலர் இனவெறியுடன் இழிவுப்படுத்தியதால் வேதனைக்குள்ளான ஆர்ச்சர் மனரீதியாக தெம்புடன் இருக்கிறாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. அதே சமயம் கடந்த டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இன்றைய டெஸ்டில் களம் காணுவார் என்று தெரிகிறது. மற்றபடி இங்கிலாந்து வீரர்கள் தொடரை கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குரிய 40 புள்ளிகளை திரட்டுவதில் முனைப்புடன் உள்ளனர்.

ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணியில் பந்து வீச்சு நன்றாக இருந்தாலும் பேட்டிங் சீராக இல்லை. முன்னணி வீரர் ஷாய் ஹோப் தொடர்ந்து திணறுவது (இரு டெஸ்டில் முறையே 9, 16, 7, 25 ரன்) அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. அவர் போதிய ரன் குவித்தால் வெஸ்ட் இண்டீசின் பேட்டிங் வரிசை வலுவடையும்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பில் சிமோன்ஸ் கூறுகையில், ‘தொடக்க வீரர் ஜான் கேம்ப்பெல், ஷாய் ஹோப் ஆகியோரின் பேட்டிங் கவலைக்குரிய வகையில் உள்ளது. இதனால் ‘டாப்’ வரிசையை மாற்றுவது குறித்து பரிசீலிக்கிறோம். 2-வது டெஸ்டில் மட்டும் எங்களது பேட்ஸ்மேன்கள் 4-5 அரைசதங்கள் அடித்தனர். ஆனால் ஒருவர் கூட அதை சதமாக மாற்றவில்லை. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தாதது ஏமாற்றம் அளிக்கிறது. இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ், டாம் சிப்லி சதம் அடித்தனர். அதே போல் எங்களது பேட்ஸ்மேன்களும் சதம் அடிக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் பந்து வீச்சாளர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்கிறாகள். இப்போது பேட்ஸ்மேன்கள் தான் பொறுப்புடன் விளையாட வேண்டும்’ என்றார். வெஸ்ட் இண்டீஸ் அணி 1988-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. அந்த நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்டுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இங்கிலாந்து: டாம் சிப்லி, ரோரி பர்ன்ஸ், ஜாக் கிராவ்லி, ஜோ ரூட் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஆலிவர் போப், ஜோஸ் பட்லர், ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், டாம் பெஸ், கிறிஸ் வோக்ஸ் அல்லது ஜோப்ரா ஆர்ச்சர்.

வெஸ்ட் இண்டீஸ்: கிரேக் பிராத்வெய்ட், ஜான் கேம்ப்பெல் அல்லது ஷானே மோஸ்லி, ஷாய் ஹோப், ஷமார் புரூக்ஸ், ரோஸ்டன் சேஸ், பிளாக்வுட், டாவ்ரிச், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), அல்ஜாரி ஜோசப், கெமார் ரோச், ஷனோன் கேப்ரியல்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இந்த டெஸ்ட் போட்டியின் போது மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story