இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் கடைசி டெஸ்ட்: 4-வது நாள் ஆட்டம் மழையால் ரத்து


இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் கடைசி டெஸ்ட்: 4-வது நாள் ஆட்டம் மழையால் ரத்து
x
தினத்தந்தி 28 July 2020 12:28 AM GMT (Updated: 28 July 2020 12:28 AM GMT)

இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கிடையேயான கடைசி டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டம், மழையால் ரத்து செய்யப்பட்டது.

மான்செஸ்டர்,

இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து அணி 369 ரன்னும், வெஸ்ட்இண்டீஸ் அணி 197 ரன்னும் எடுத்தன. 172 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதனை அடுத்து 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜான் கேம்ப்பெல் ரன் எதுவும் எடுக்காமலும், கெமார் ரோச் 4 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 3-வது நாள் ஆட்டம் முடிவில் வெஸ்ட்இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் 6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 10 ரன்கள் எடுத்து இருந்தது. பிராத்வெய்ட் 2 ரன்னுடனும், ஷாய் ஹோப் 4 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 2-வது இன்னிங்சில் முதல் 2 விக்கெட்டையும் கைப்பற்றினார். 140-வது டெஸ்டில் ஆடும் பிராட்டின் விக்கெட் எண்ணிக்கை 499 ஆக உயர்ந்தது.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடக்க இருந்தது. ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால் நேற்றைய ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. வெஸ்ட்இண்டீஸ் அணி தோல்வியை தவிர்க்க 98 ஓவர்கள் தாக்குப்பிடிக்க வேண்டும். இன்றைய கடைசி நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அங்கு மழை பெய்ய 50 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story