போட்டி அட்டவணையை முடிவு செய்ய ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு 2-ந்தேதி ஆலோசனை


போட்டி அட்டவணையை முடிவு செய்ய ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு 2-ந்தேதி ஆலோசனை
x
தினத்தந்தி 29 July 2020 12:56 AM GMT (Updated: 29 July 2020 12:56 AM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அட்டவணையை இறுதி செய்ய ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு வருகிற 2-ந்தேதி ஆலோசிக்க உள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது. அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 8-ந்தேதி வரை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்து வருகிறது.

இந்த நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு கூட்டம் வருகிற 2-ந்தேதி நடக்க இருப்பதாக ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் நேற்று தெரிவித்தார். டெலிகான்பரஸ் மூலம் நடக்கும் இந்த கூட்டத்தில் ஐ.பி.எல். போட்டிக்கான ஏற்பாடுகள், போட்டி அட்டவணை, கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதித்து இறுதி செய்யப்படுகிறது.

லோதா கமிட்டியின் பரிந்துரைப்படி பார்த்தால் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோரின் பதவி காலம் நிறைவடைந்து விட்டது. ஆனால் அவர்கள் பதவியில் தொடர்ந்து நீடிக்கும் வகையில் விதிமுறையில் திருத்தம் செய்து அதற்கு சுப்ரீம் கோர்ட்டில் கிரிக்கெட் வாரியம் சார்பில் அனுமதி கோரப்பட்டு அது தொடர்பான வழக்கு வருகிற 17-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. இதற்கு மத்தியில் நடக்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அவர்கள் இருவரும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஐ.பி.எல். போட்டி ரசிகர்கள் இன்றி நடக்கவே அதிக வாய்ப்பு உள்ளதால் டிக்கெட் வருமானத்தில் அணிகளுக்கு பெருத்த அடி விழும். அது பற்றியும் விவாதித்து அவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து முடிவு செய்யப்படுகிறது. டி.வி. ஒளிபரப்பு நிறுவனம் ஆதாயம் பெறும் வகையில் ஒரே நாளில் இரண்டு ஆட்டங்கள் நடத்தப்படுவது குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

வீரர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டு, தேவையில்லாமல் யாரும் நெருங்க முடியாத அளவுக்கு கட்டுப்பாடுகள் இருக்கும். சொல்லப்போனால் குறிப்பிட்ட பகுதியில் முடங்க வேண்டியது இருக்கும். இத்தகைய சூழலில் வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் தங்குவதற்கு அனுமதி அளிக்கலாமா? என்பது பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது.

கூட்டம் முடிந்ததும் ஐ.பி.எல். தொடரின் போது எத்தகைய மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது என்ற வழிகாட்டுதல்கள் 8 அணிகளின் நிர்வாகிகளுக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது. ஒவ்வொரு அணி நிர்வாகத்தின் சார்பில் அமீரகத்தில் தங்கள் அணி வீரர்களுக்கு தேவையான வசதி வாய்ப்புகளை ஆய்வு செய்து ஏற்பாடுகளை கவனிக்க தனி குழு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.


Next Story