டெஸ்ட் தரவரிசையில் ஸ்டூவர்ட் பிராட் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்


டெஸ்ட் தரவரிசையில் ஸ்டூவர்ட் பிராட் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 30 July 2020 12:58 AM GMT (Updated: 30 July 2020 12:58 AM GMT)

டெஸ்ட் தரவரிசையில் ஸ்டூவர்ட் பிராட் 3-வது இடத்துக்கு முன்னேறினார்.

துபாய், 

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக மான்செஸ்டரில் நடந்த கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 269 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் டாப்-10 இடத்தில் ஒரே ஒரு மாற்றமாக இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் 3-ல் இருந்து 4-வது இடத்துக்கு இறங்கியுள்ளார். மற்றபடி ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா) முதலிடத்திலும், விராட் கோலி (இந்தியா) 2-வது இடத்திலும் நீடிக்கிறார்கள். மான்செஸ்டர் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் (57 மற்றும் 90 ரன்) அரைசதம் அடித்த இங்கிலாந்து தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் 13 இடங்கள் எகிறி தனது சிறந்த தரநிலையாக 17-வது இடத்தை பிடித்துள்ளார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் (904 புள்ளி) முதலிடத்திலும், நியூசிலாந்தின் நீல் வாக்னெர் (843 புள்ளி) 2-வது இடத்திலும் தொடருகிறார்கள். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்டில் மொத்தம் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 55 புள்ளிகள் கூடுதலாக சேகரித்து 7 இடம் முன்னேற்றம் கண்டுள்ளார். அவர் மொத்தம் 823 புள்ளிகளுடன் 3-வது இடம் வகிக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் 2 இடங்கள் சரிந்து 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்திய தரப்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 8-வது இடத்தில் உள்ளார்.

ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்திலும், ஜாசன் ஹோல்டர் 2-வது இடத்திலும், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 3-வது இடத்திலும் மாற்றமின்றி நீடிக்கிறார்கள்.


Next Story