‘இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த டோனி, ரோகித் சர்மா தான்’ - சுரேஷ்ரெய்னா கருத்து + "||" + ‘The next Dhoni in the Indian cricket team is Rohit Sharma’ - Suresh Raina comment
‘இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த டோனி, ரோகித் சர்மா தான்’ - சுரேஷ்ரெய்னா கருத்து
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த டோனி, ரோகித் சர்மா தான் என்று சுரேஷ்ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனுமான சுரேஷ் ரெய்னா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த டோனி, ரோகித் சர்மா தான் என்று நான் சொல்வேன். அவரது செயல்பாடுகளை நான் பார்த்து இருக்கிறேன். அவர் மிகவும் அமைதியானவர், மற்றவர்களின் கருத்தை கேட்கக்கூடியவர். சக வீரர்களுக்கு நம்பிக்கை அளிப்பதில் விருப்பம் கொண்டவர். எல்லாவற்றுக்கும் மேலாக தானே முன்னின்று அணியை வழிநடத்துவதை விரும்பக்கூடியவர். அணியை முன்னின்று நடத்தும் அதேநேரத்தில் வீரர்களின் ஓய்வறை சூழலுக்கும் மதிப்பு அளிப்பவர். அப்படி செயல்படும் போது நீங்கள் எல்லாம் கிடைத்தது போன்று உணருவீர்கள். அவர் எல்லோரையும் ஒரு கேப்டனாக நினைப்பார். அவரது கேப்டன்ஷிப் தன்மையை நான் பார்த்து இருக்கிறேன்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நமது அணி கோப்பையை வென்ற போது அவரது தலைமையின் கீழ் நான் விளையாடி உள்ளேன். இளம் வீரர்களான ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருக்கு அவர் எந்த அளவுக்கு நம்பிக்கை அளித்தார் என்பதை பார்த்து இருக்கிறேன். டோனிக்கு அடுத்து முன்னணி வீரர்களில் ஒருவராக ரோகித் சர்மா விளங்குகிறார். டோனி புத்திசாலியான கேப்டன். ஆனால் டோனியையும் விட அதிக ஐ.பி.எல். கோப்பையை ரோகித் சர்மா வென்றுள்ளார். இருவருடைய கேப்டன்ஷிப் பண்பும் ஒரே மாதிரி தான் இருக்கும். இருவருமே மற்றவர்களின் கருத்தை கவனிக்கக்கூடியவர்கள். உங்கள் கேப்டன் மற்றவர்கள் சொல்வதை கவனித்தாலே நிறைய பிரச்சினைகளை தீர்க்க முடியும். அத்துடன் வீரர்களின் மனரீதியான பிரச்சினையை சமாளிக்க முடியும். என்னை பொறுத்தமட்டில் இருவரும் அற்புதமான கேப்டன்கள்.