கிரிக்கெட்

அயர்லாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி எளிதில் வெற்றி + "||" + First ODI against Ireland: England win easily

அயர்லாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி எளிதில் வெற்றி

அயர்லாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட்:  இங்கிலாந்து அணி எளிதில் வெற்றி
அயர்லாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி எளிதில் வெற்றி பெற்றது.
சவுதம்டன்,

இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த அயர்லாந்து 44.4 ஓவர்களில் 172 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக அறிமுக வீரர் கேம்பெர் 59 ரன் எடுத்தார்.

இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லி 30 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். ஓராண்டு இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பிய டேவிட் வில்லி தனது சிறந்த பந்து வீச்சை பதிவு செய்து அசத்தியுள்ளார்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 27.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி கண்டது. சாம் பில்லிங்ஸ் 67 ரன்னுடனும் (54 பந்து, 11 பவுண்டரி), கேப்டன் இயான் மோர்கன் 36 ரன்னுடனும் (40 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தனர். டேவிட் வில்லி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தோல்வி குறித்து அயர்லாந்து கேப்டன் ஆன்டி பால்பிர்னி கூறுகையில், ‘ஆடுகளத்தின் தன்மையை முன்கூட்டியே நாங்கள் சரியாக கணிக்கவில்லை. மோசமாக அமைந்த முதல் 5-6 ஓவர்களை (28 ரன்னுக்குள் 5 விக்கெட்) எங்களால் ஈடுசெய்ய முடியவில்லை. பயிற்சியில் நன்றாக செயல்பட்டோம். ஆனால் அது போட்டியில் பிரதிபலிக்கவில்லை. ஆட்ட சூழ்நிலையை நாங்கள் இன்னும் சிறப்பாக கணிக்க வேண்டியது அவசியமானதாகும்’ என்றார்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி தகுதிக்கான கணக்கில் கொள்ளப்படும் இந்த சூப்பர் லீக் போட்டியில் வென்றதன் மூலம் இங்கிலாந்து அணி 10 புள்ளிகள் பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.