அயர்லாந்துக்கு எதிரான 2-வது ஆட்டத்திலும் இங்கிலாந்து வெற்றி


அயர்லாந்துக்கு எதிரான 2-வது ஆட்டத்திலும் இங்கிலாந்து வெற்றி
x
தினத்தந்தி 2 Aug 2020 11:22 PM GMT (Updated: 2 Aug 2020 11:22 PM GMT)

அயர்லாந்துக்கு எதிரான 2-வது ஆட்டத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.

சவுதம்டன்,

இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த அயர்லாந்து 9 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்தது. கேம்பெர் அரைசதம் (68 ரன்) அடித்தார். அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ அதிரடியில் வெளுத்து கட்டினார். 21 பந்துகளில் அரைசதத்தை எட்டிய அவர், இதன் மூலம் இங்கிலாந்து வீரர்களில் அதிவேகமாக அரைசதம் விளாசிய இயான் மோர்கனின்(2018-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 21 பந்தில் 50 ரன்) சாதனையை சமன் செய்தார். பந்தை மைதானத்தின் நாலாபுறமும் தெறிக்கவிட்ட பேர்ஸ்டோ 82 ரன்களில் (41 பந்து, 14 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். பேர்ஸ்டோ வெளியேறியதும் இங்கிலாந்துக்கு சிக்கல் உருவானது. கேப்டன் இயான் மோர்கன், துணை கேப்டன் மொயீன் அலி இருவரும் அடுத்தடுத்து டக்-அவுட் ஆனார்கள். ஒரு கட்டத்தில் அந்த அணி 137 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடிக்குள்ளானது. இதன் பிறகு கைகோர்த்த சாம் பில்லிங்சும், டேவிட் வில்லியும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இங்கிலாந்து அணி 32.3 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பில்லிங்ஸ் 46 ரன்களுடனும் (61 பந்து, 6 பவுண்டரி), வில்லி 47 ரன்களுடனும் (46 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் தொடரை 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

Next Story