‘வயது மோசடியில் ஈடுபடும் வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் எச்சரிக்கை


‘வயது மோசடியில் ஈடுபடும் வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 3 Aug 2020 11:19 PM GMT (Updated: 3 Aug 2020 11:19 PM GMT)

‘வயது மோசடியில் ஈடுபடும் வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மும்பை,

விளையாட்டு போட்டிகளில் ஜூனியர் பிரிவில் வயது குளறுபடி தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எல்லா வயது பிரிவிலும் அதற்குரிய சமமான போட்டி களத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். வயது மோசடியை சமாளிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. வயது மோசடியை ஒழிக்க எடுக்கப்படும் நடவடிக்கையை இந்த சீசனில் இருந்து கடுமையாக்க முடிவு செய்து இருக்கிறோம். வயது மோசடியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் தானாக முன்வந்து தங்களது தவறை ஒப்புக்கொண்டால் தண்டனையில் இருந்து தப்பலாம். வயதை ஏமாற்றி சான்றிதழ் அளித்து இருக்கும் வீரர்கள் தங்களின் உண்மையான வயது சான்றிதழை வருகிற செப்டம்பர் 15-ந் தேதிக்குள் இந்திய கிரிக்கெட் வாரிய வயது சரிபார்த்தல் பிரிவுக்கு கையெழுத்திட்ட கடிதத்துடன் இ-மெயில் செய்ய வேண்டும். அப்படி செய்தால் அவர்கள் தங்களுடைய உண்மையான வயது பிரிவில் விளையாட அனுமதிக்கப்படுவார்கள். மாறாக இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பதிவு செய்து இருக்கும் ஜூனியர் வீரர்களில் யாராவது தவறான வயது சான்றிதழ் அளித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்படும். தடை காலம் முடிந்த பிறகும் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் நடத்தும் வயது பிரிவு போட்டிகளில் பங்கேற்க அந்த வீரர் அனுமதிக்கப்படமாட்டார். தவறான குடியேற்ற சான்றிதழ் அளிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கும் 2 ஆண்டு தடை விதிக்கப்படும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story