ஐபிஎல் போட்டித் தொடரை நடத்த மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அடுத்தகட்டப் பணிகள் தொடக்கம்


ஐபிஎல் போட்டித் தொடரை நடத்த மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அடுத்தகட்டப் பணிகள் தொடக்கம்
x
தினத்தந்தி 7 Aug 2020 12:10 PM GMT (Updated: 7 Aug 2020 12:10 PM GMT)

ஐபிஎல் போட்டித் தொடரை நடத்த மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து அடுத்தகட்டப் பணிகளை அணி நிர்வாகங்கள் தொடங்கியுள்ளன.

புதுடெல்லி

இந்தியாவில் கொரோனா காரணமாக வழக்கமாக மார்ச் மாதம் தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து, வெளிநாடுகளில் ஐபிஎல் போட்டியை நடத்தும் முடிவுக்கு பிசிசிஐ வந்தது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 13-வது ஐபிஎல் போட்டியை நடத்த ஐபிஎல் அமைப்பு முடிவு செய்தது. இதன்படி செப்டம்பர் 19-ம் தேதி முதல் நவம்பர் 10-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் போட்டியை நடத்த ஐபிஎல் நிர்வாகக் குழு முடிவு செய்தது.

இந்தச் சூழலில் ஐபிஎல் ஸ்பான்ஸராக சீனாவின் விவோ நிறுவனம் இருந்த நிலையில், அதுகுறித்துப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. ஐபிஎல் போட்டிக்கான ஸ்பான்ஸரிலிருந்து சீன நிறுவனமான விவோ தற்போது நிறுத்தபட்டது.

ஐபிஎல் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டபோதிலும் மத்திய அரசிடம் இருந்து ஐபிஎல் நிர்வாகத்துக்கு முறையான அனுமதி கிடைக்காததால், மேற்கொண்டு பணிகளைத் தொடங்காமல் இருந்தது.

இந்நிலையில் ஐபிஎல்  போட்டித் தொடரை நடத்த மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து அடுத்தகட்டப் பணிகளை அணி நிர்வாகங்கள் தொடங்கியுள்ளன.

இதுகுறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கு கொள்கை அளவில் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதிகாரபூர்வ அனுமதி அடுத்த சில நாட்களில் எப்போது வேண்டுமானாலும் கைக்குக் கிடைத்துவிடும்.

அனைத்து அணி வீரர்கள், நிர்வாகிகள், அணி உறுப்பினர்கள் அனைவரும் வரும் 20-ம் தேதிக்குப் பின் இந்தியாவை விட்டுப் புறப்பட வேண்டும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் 22-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் புறப்படுகிறது

இதையடுத்து வீரர்களைத் தனிமைப்படுத்தி வைக்கும் பணியை 8 அணி நிர்வாகங்களும் தொடங்கியுள்ளன.
8 அணி நிர்வாகங்களும் வீரர்களைத் தனிமைப்படுத்தி, அவர்களுக்குக் கொரோனா பரிசோதனை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளை நடத்த ஆயத்தமாகி வருகின்றன.

Next Story