கிரிக்கெட்

ஓராண்டு தள்ளிவைக்கப்பட்டாலும் உலக கோப்பை போட்டியில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன் - மிதாலிராஜ் கருத்து + "||" + Mithali Raj Firmly Targets To Win 2022 World Cup

ஓராண்டு தள்ளிவைக்கப்பட்டாலும் உலக கோப்பை போட்டியில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன் - மிதாலிராஜ் கருத்து

ஓராண்டு தள்ளிவைக்கப்பட்டாலும் உலக கோப்பை போட்டியில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன் - மிதாலிராஜ் கருத்து
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஓராண்டு தள்ளிவைக்கப்பட்டாலும், அந்த போட்டியில் விளையாட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறேன் என்று இந்திய அணியின் கேப்டன் மிதாலிராஜ் தெரிவித்தார்.
புதுடெல்லி,

12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஒவர்) அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி 6-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை நியூசிலாந்தில் நடக்க இருந்தது. இந்த போட்டிக்கு நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய 5 அணிகள் தகுதி பெற்று இருந்தன. எஞ்சிய 3 இடத்துக்கான தகுதி சுற்று போட்டி இலங்கையில் நடக்க இருந்த நிலையில் கொரோனா அச்சத்தால் அந்த தகுதி சுற்று தள்ளிபோடப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பால் பெண்கள் உலக கோப்பை போட்டியை 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தள்ளிவைப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று முன்தினம் அறிவித்தது.

இதை சுட்டிகாட்டி ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனையும், வர்ணனையாளருமான லிசா தனது டுவிட்டர் பதிவில், ‘அடுத்த ஆண்டு நடக்க இருந்த உலக கோப்பை போட்டிக்கு பிறகு ஓய்வு பெறலாம் என்று திட்டமிட்டு இருந்த மிதாலிராஜ், ஜூலன் கோஸ்வாமி (இருவரும் இந்தியா), ரேச்சல் ஹெய்ன்ஸ் (ஆஸ்திரேலியா) போன்ற வீராங்கனைகள் இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்’ என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

இதற்கு இந்திய ஒரு நாள் போட்டி அணியின் கேப்டன் 37 வயது மிதாலி ராஜ் பதிலளித்துள்ளார். அவர் டுவிட்டர் பதிவில், ‘நிச்சயமாக உலக கோப்பை மீது எனது பார்வையை பதித்து இருக்கிறேன். எல்லா வகையான சிறிய காயங்களில் இருந்தும் மீண்டு முன்பை விட உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்ச்சியுடனும், வலுவாகவும் இருக்கிறேன். 2022-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் விளையாடி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளை எட்டுவதில் ஆர்வமாக இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

37 வயதான இந்திய வேகப்பந்துவீச்சு வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி கூறுகையில், ‘அடுத்த ஆண்டு உலக கோப்பை போட்டி நடந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இதற்காக நான் நீண்ட காலமாக கவனம் செலுத்தி வந்தேன். தற்போது இதனை எல்லாம் தாண்டி சிந்திக்க வேண்டி உள்ளது. கடந்த 5-6 மாதங்களாக நாங்கள் எந்தவித கிரிக்கெட்டும் விளையாடவில்லை. அதிலும் என்னை போன்றவர்கள் (ஒருநாள் போட்டியில் மட்டும் பங்கேற்பவர்கள்)

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு எந்தவொரு போட்டியிலும் ஆடவில்லை. இந்தியாவுக்காக விளையாடுவது மிகப்பெரிய கவுரவமாகும். தற்போது 2022-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் ஆடுவதே எனது இலக்காகும். உலக கோப்பைக்கான அணியில் அங்கம் வகிக்க வேண்டும் என்றால் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்’ என்றார்.