‘பட்லர், வோக்ஸ் அதிரடியாக விளையாடி வெற்றி வாய்ப்பை பறித்து விட்டனர்’ - பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி


‘பட்லர், வோக்ஸ் அதிரடியாக விளையாடி வெற்றி வாய்ப்பை பறித்து விட்டனர்’ - பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி
x
தினத்தந்தி 10 Aug 2020 1:03 AM GMT (Updated: 10 Aug 2020 1:03 AM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் தங்களது அணியின் வெற்றி வாய்ப்பை பட்லரும், வோக்சும் அதிரடியாக விளையாடி தட்டிப்பறித்து விட்டதாக பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி கூறியுள்ளார்.

மான்செஸ்டர், 

மான்செஸ்டரில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் பாகிஸ்தான் நிர்ணயித்த 277 ரன்கள் இலக்கை நோக்கி 4-வது நாளான நேற்று முன்தினம் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 117 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை தாரைவார்த்து பரிதவித்தது.

இதன் பின்னர் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரும், ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்சும் அதிரடியாக விளையாடி தங்கள் அணியை கரைசேர்த்தனர். பட்லர் 75 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் 84 ரன்களும் (நாட்-அவுட்) விளாசினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 13-ந்தேதி சவுதம்டனில் தொடங்குகிறது.

ஆசிய கண்டத்திற்கு வெளியே பாகிஸ்தான் அணி தொடர்ந்து தழுவிய 7-வது தோல்வி இதுவாகும். தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி கூறுகையில், ‘இறுதியில் தோல்வி அணியாக இருப்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. எல்லா சிறப்பும் ஜோஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ் ஆகியோரையே சாரும். அவர்கள் இருவரும் அதிரடி காட்டி ஆட்டத்தை தங்கள் பக்கம் மாற்றி விட்டனர். அவர்கள் உருவாக்கிய பார்ட்னர்ஷிப்பை பாராட்டித்தான் ஆக வேண்டும். இருவரும் களம் கண்டது முதலே சுழற்பந்து வீச்சு மீது தாக்குதல் தொடுத்தனர். ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகளை அடித்தனர். எல்லாமே அவர்களுக்கு கைகொடுத்தது. துரதிர்ஷ்டவசமாக நாங்கள் நினைத்த மாதிரி நடக்கவில்லை.

ஒரு கட்டத்தில் நாங்கள் வலுவாக இருந்தோம். ஆனால் ஆடுகளத்தில் பந்து வீச்சுக்கு உகந்த தாக்கம் இல்லை. பந்தின் தன்மை நல்ல நிலையில் இருந்தும் ரிவர்ஸ் ஸ்விங் ஆகாது ஆச்சரியம் அளித்தது.

2-வது இன்னிங்சில் குறைந்த ரன்கள் (169 ரன்) எடுத்ததே தோல்விக்கு காரணம் என்று கூறமாட்டேன். இங்கிலாந்தை வீழ்த்த கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டோம். மேலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தால் ஜெயித்து இருப்போம். சொல்லப்போனால் இந்த டெஸ்டில் பெரும்பகுதியில் எங்களது கையே ஓங்கி இருந்தது. தோல்வி அடைந்தாலும் இன்னும் டெஸ்ட் தொடர் முடிந்து விடவில்லை. மேலும் 2 டெஸ்ட் எஞ்சி இருக்கிறது. இந்த டெஸ்டில் இருந்து நிறைய சாதகமான அம்சங்களை எடுத்துக் கொள்ள முடியும்.

இங்கிலாந்து மண்ணில் நாங்கள் எப்போதும் சிறப்பாக விளையாடி வந்திருக்கிறோம். இங்கிலாந்து மண்ணில் அதிக வெற்றிகளை குவித்த ஆசிய அணி நாங்கள் தான். இங்கு நாங்கள் தடுமாறுவது கிடையாது. கடைசி இரு டெஸ்டிலும் கடும் சவால் கொடுக்க முடியும் என்று நம்புகிறோம்’ என்றார்.

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறுகையில், ‘அருமையான சேசிங். பட்லரும், கிறிஸ் வோக்சும் ஆடிய விதமும், பார்ட்னர்ஷிப்பும் அற்புதம். பட்லரின் தந்தை உடல்நலக்குறையால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்தகைய நிலையிலும் சமாளித்து மனரீதியாக வலுவானவர் என்பதை அவர் காட்டியிருக்கிறார். வீரர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்’ என்றார்.


Next Story