இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம் விதிப்பு


இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம் விதிப்பு
x
தினத்தந்தி 12 Aug 2020 3:10 AM GMT (Updated: 12 Aug 2020 3:10 AM GMT)

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு, அவரது தந்தை கிறிஸ் பிராட் அபராதம் விதித்துள்ளார்.


* இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தனது மனைவி ரிவபாவுடன் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று முன்தினம் இரவு காரில் சென்று கொண்டிருந்தார். காரை ஓட்டிய ஜடேஜா ‘மாஸ்க்’ (முக கவசம்) அணிந்து இருந்தார். ஆனால் அவரது மனைவி முக கவசம் அணியவில்லை. சோதனையின் போது அவர்களது காரை மறித்த பெண் போலீஸ் ஏட்டு சோனல் கோசாய், ரவீந்திர ஜடேஜாவின் மனைவியிடம் முகக்கவசம் அணியாதது ஏன்? என்று கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. ஆத்திரம் அடைந்த ரவீந்திர ஜடேஜாவும், பெண் போலீஸ் ஏட்டுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கடுமையான வாக்குவாதத்தால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த பெண் போலீஸ் ஏட்டு சற்று நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.

* மான்செஸ்டரில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் யாசிர் ஷாவின் விக்கெட்டை கைப்பற்றிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், அவரை தகாத வார்த்தையால் திட்டினார். இது குறித்து மைதான நடுவர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய ஐ.சி.சி. போட்டி நடுவரும், ஸ்டூவர்ட் பிராட்டின் தந்தையுமான கிறிஸ் பிராட், தவறை ஒப்புக்கொண்ட ஸ்டூவர்ட் பிராட்டுக்கு போட்டி கட்டணத்தில் 15 சதவீதத்தை அபராதமாகவும், ஒரு தகுதி இழப்பு புள்ளியை தண்டனையாகவும் விதித்து உத்தரவிட்டார். ஒரு கிரிக்கெட் வீரருக்கு தந்தையே அபராதம் விதித்திருப்பது இதுவே முதல் நிகழ்வாகும்.

* பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய போது ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டத்தில் ஈடுபட தரகர்கள் அணுகியதை வீரர் உமர் அக்மல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவிக்காமல் மறைத்ததற்காக அவருக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்து அவர் செய்த அப்பீலை விசாரித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தனிப்பட்ட தீர்ப்பாய நீதிபதி, உமர் அக்மலுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை 18 மாதமாக குறைத்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் அப்பீல் செய்யப்போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதற்கு உமர் அக்மலின் அண்ணனும், பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேனுமான கம்ரன் அக்மல் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘கடந்த காலங்களில் இதுபோன்ற தவறுக்காக 3 முதல் 6 மாதங்கள் தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் உமர் அக்மலுக்கு 18 மாதம் தண்டனை அளிக்கப்பட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திருப்தி அடையாதது வருத்தம் அளிக்கிறது. தவறை ஒப்புக்கொண்டு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்தும் உமர் அக்மல் நியாயமாக நடத்தப்படவில்லை. குறைக்கப்பட்ட 18 மாத தடையே அவருக்கு கடினமானதாகும்’ என்றார்.

Next Story