இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்


இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 13 Aug 2020 1:11 AM GMT (Updated: 13 Aug 2020 1:11 AM GMT)

இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

சவுதம்டன், 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ரசிகர்கள் இன்றி நடக்கும் இந்த தொடரின் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை ருசித்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

மான்செஸ்டரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 107 ரன்கள் பின்தங்கி இருந்த போதிலும் 2-வது இன்னிங்சில் எழுச்சி பெற்றது. 277 ரன்கள் இலக்கை கிறிஸ் வோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோரின் அதிரடியான அரைசதங்கள் எட்டுவதற்கு உதவின. குடும்ப விஷயம் காரணமாக ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் எஞ்சிய தொடரில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக ஜாக் கிராவ்லி களம் காணுவார் என்று தெரிகிறது. முந்தைய டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் 38 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்து வீச்சில் உயிரோட்டமே இல்லை. இரண்டு இன்னிங்சையும் சேர்த்து ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். மொத்தம் 590 விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையாளர் என்ற போதிலும் சமீபகால தடுமாற்றம் அவரை மாற்றுவது குறித்து அணி நிர்வாகத்தை யோசிக்க வைத்திருக்கிறது. மற்றபடி தொடரை வெல்லும் உத்வேகத்துடன் இங்கிலாந்து அணியினர் ஆயத்தமாகி உள்ளனர்.

முதலாவது டெஸ்டில் வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டதால் பாகிஸ்தான் அணி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அந்த அணி முதல் இன்னிங்சில் 326 ரன்கள் குவித்த போதிலும் 2-வது இன்னிங்சில் 169 ரன்னில் சுருண்டது பின்னடைவை ஏற்படுத்தியது. கேப்டன் அசார் அலி (0, 18 ரன்) இந்த டெஸ்டில் சொதப்பினார். அவர் கடைசியாக விளையாடிய 12 வெளிநாட்டு டெஸ்ட் இன்னிங்சில் வெறும் 139 ரன் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் கேப்டன் பதவியை தக்கவைக்க சாதிக்க வேண்டிய நெருக்கடிக்கு அசார் அலி தள்ளப்பட்டு உள்ளார்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் நல்ல நிலையில் உள்ளது. பேட்டிங்கிலும் அசத்தினால் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க முடியும்.

இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இங்கிலாந்து: ரோரி பர்ன்ஸ், டாம் சிப்லி, ஜாக் கிராவ்லி, ஜோ ரூட் (கேப்டன்), ஆலிவர்போப், ஜோஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜோப்ரா ஆர்ச்சர், டாம் பெஸ், ஆண்டர்சன் அல்லது மார்க்வுட் அல்லது சாம் கர்ரன்.

பாகிஸ்தான்: ஷான் மசூத், அபித் அலி, அசார் அலி (கேப்டன்), பாபர்அசாம், ஆசாத் ஷபிக், முகமது ரிஸ்வான், ஷதப் கான், யாசிர் ஷா, முகமது அப்பாஸ், ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா.

இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. முதல் நாளில் மழை குறுக்கிட கணிசமான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹபீசுக்கு சிக்கல்

இங்கிலாந்துக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களில் மூத்த வீரர் முகமது ஹபீஸ் கொரோனா பாதுகாப்பு தடுப்பு வளையத்தை மீறி ஓட்டலின் வெளிப்பகுதியில் வயதான பெண்ணிடம் நேற்று பேசியதுடன் அதை டுவிட்டரிலும் வெளியிட்டது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இனி அவர் 5 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதுடன், இரண்டு முறை கொரோனா பரிசோதனைக்கும் உட்படுத்த படுவார்.

Next Story