டோனியின் இரவு 7.29 மணி ரகசியம்


டோனியின் இரவு 7.29 மணி ரகசியம்
x
தினத்தந்தி 17 Aug 2020 1:02 AM GMT (Updated: 17 Aug 2020 1:02 AM GMT)

டோனியின் இரவு 7.29 மணி ரகசியத்துக்கான காரணம் தெரியவந்துள்ளது.


இந்திய அணியின் முன்னாள் கேப்டனான டோனி ஓய்வு அறிவிப்பை நேற்று முன்தினம் இரவு வெளியிட்டார். ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் இரண்டு வரிகளில், ‘இத்தனை காலம் அன்பும், ஆதரவும் அளித்த அனைவருக்கும் நன்றி. இரவு 7.29 மணியில் இருந்து ஓய்வு பெற்றதாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறியிருந்தார். அவர் ஏன் இரவு 7.29 மணியில் இருந்து ஓய்வு என்று குறிப்பிட்டார் என்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

இந்திய அணி கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரைஇறுதியில் வீழ்ந்தது. நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் 240 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அணியை கரைசேர்க்க போராடிய டோனி 50 ரன்களில் ரன்-அவுட் ஆனார். கடைசி விக்கெட்டாக யுஸ்வேந்திர சாஹல் ஆட்டம் இழந்து இந்திய அணி வெளியேறிய போது நேரம் சரியாக இரவு 7.29 மணி. இது தான் டோனி விளையாடிய கடைசி போட்டி. இதை மனதில் வைத்து தான் டோனி இந்த நேரத்தை குறிப்பிட்டுள்ளார்.

‘பிக்பாக்கெட் அடிப்பவரை விட வேகமாக செயல்படுவார்’

ரவிசாஸ்திரி (இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்): இந்தியாவின் சிறந்த வீரர்களில் ஒருவரான டோனிக்கு ஒரு சல்யூட். அவருடன் ஓய்வறையை பகிர்ந்து கொண்டதை கவுரவமாக கருதுகிறேன். விக்கெட் கீப்பிங்கில் ஸ்டம்பிங் மற்றும் ரன்-அவுட் செய்வதில் டோனி கைதேர்ந்தவர். ரன்-அவுட், ஸ்டம்பிங் செய்யும் போது அவரது கைகள் பிக்பாக்கெட் அடிப்பவரை விட வேகமாக செயல்படும்.

‘7-ம் நம்பர் சீருடைக்கு ஓய்வு கொடுங்கள்’

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்: (கடந்த உலக கோப்பையில் டோனியுடன் இருக்கும் புகைப்படத்தை சேர்த்து வெளியிட்டு) டோனி ஓய்வு பெற்ற நிலையில் அவர் அணியும் 7-ம் நம்பர் சீருடைக்கும் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஓய்வு கொடுக்க வேண்டும்.

இந்திய முன்னாள் வீரர் முகமது கைப்: இந்திய அணியில் 7-ம் நம்பர் சீருடையை யாரும் மீண்டும் அணிவதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. மறக்க முடியாத நினைவுகளை விட்டுச் சென்ற டோனிக்கு நன்றி.

டோனிக்கு வழியனுப்பும் போட்டி நடத்த கோரிக்கை

டோனி 13 மாதங்களுக்கு முன்பு உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். அதன் பிறகு இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். தற்போது ஓய்வு பெற்று விட்ட நிலையில் இந்திய கிரிக்கெட்டில் மகத்தான வெற்றிகளைத் தேடித்தந்த அவருக்கு, வழியனுப்பும் போட்டியை நடத்தி கவுரவிக்க வேண்டும் என்று ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ‘அந்த போட்டியை அவரது சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடத்த வேண்டும், அதை ஒட்டுமொத்த உலகமும் பார்க்க வேண்டும்’ என்றும் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்களும், டோனிக்கு பிரிவுபசார போட்டி நடத்தப்பட வேண்டும் என்று சமூக வலைதளம் மூலம் வலியுறுத்தி வருகிறார்கள்.

வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்): என்னை கவர்ந்த கிரிக்கெட் வீரர்களில் டோனியும் ஒருவர். வந்தார், விளையாடினார், வெற்றிக்கொண்டார். 20 ஓவர் உலக கோப்பை, 50 ஓவர் உலக கோப்பை மற்றும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை அவரது வெற்றியில் அடக்கம். எதிரணியை கண்டு பயப்படாத அவரது தைரியமான ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

சோயிப் அக்தர்: கிரிக்கெட் வரலாறு, டோனி இல்லாமல் ஒரு போதும் முழுமைபெறாது. அவர் ஒரு ஜாம்பவான்.

ரமீஸ் ராஜா: சிறந்த தலைவர். மிகப்பெரிய சாதனைகளை கொண்டவர். அதிரடியால் ரசிகர்களை குதூகலப்படுத்தும் ஒப்பற்ற வீரர். டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை துல்லியமாக கணிப்பதில் உலகிலேயே மிகச்சிறந்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய கிரிக்கெட்டில் மறக்க முடியாத தருணம் என்று வரும் போது எப்போதும் முன்னணியில் இருப்பார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கவுதம் கம்பீர் : மூன்று வகையான ஐ.சி.சி. கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டனாக டோனி மட்டுமே இருப்பார். இச்சாதனையை வேறு எந்த கேப்டனும் தகர்க்க வாய்ப்பில்லை என்று சவால் விடுக்க முடியும்.

ரோகித் சர்மா: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிகமாக கோலோச்சியவர்களில் டோனியும் ஒருவர். கிரிக்கெட்டுக்கும், கிரிக்கெட்டை சுற்றியும் அவர் ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது. ஒரு அணியை எப்படி உருவாக்குவது, கட்டமைப்பது என்பதில் தீர்க்கமான நோக்கம் கொண்டவர். நீல நிற சீருடையில் அவரை பார்க்கும் வாய்ப்பை இழக்கிறோம். ஆனால் மஞ்சள் நிற சீருடையில் (சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக) அவரை நாம் பார்க்கப் போகிறோம். 19-ந்தேதி டாஸ் போடும் நிகழ்வில் (செப்டம்பர் 19-ந்தேதி ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதுவதை குறிப்பிட்டு) உங்களை சந்திக்கிறேன்.

ஹர்திக் பாண்ட்யா: கிரிக்கெட்டில் ஒரே டோனி தான். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய உந்து சக்தி அளித்த நண்பர், மூத்த சகோதரரான டோனிக்கு நன்றி. நீங்கள் எப்போதும் என்னை வழிநடத்துவீர்கள் என்று நம்புகிறேன்.


Next Story