“டோனி தான் எனக்கு எப்போதும் கேப்டன்” - விராட் கோலி புகழாரம்


“டோனி தான் எனக்கு எப்போதும் கேப்டன்” - விராட் கோலி புகழாரம்
x
தினத்தந்தி 17 Aug 2020 1:12 AM GMT (Updated: 17 Aug 2020 1:12 AM GMT)

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டோனிக்கு புகழாரம் சூட்டியுள்ள இந்திய கேப்டன் விராட் கோலி, அவர் தான் தனக்கு எப்போதும் கேப்டன் என்று கூறியுள்ளார்.

சென்னை, 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் டோனி சுதந்திர தினமான நேற்று முன்தினம் இரவு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். டோனியைத் தொடர்ந்து மற்றொரு இந்திய வீரர் 33 வயதான சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். இவர்கள் இருவரும் தற்போது சென்னையில் நடந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர்.

39 வயதான டோனி கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளார். அவற்றில், ஒரு நாள் கிரிக்கெட்டில் 47 ஆட்டங்களில் இலக்கை வெற்றிகரமாக விரட்டிப்பிடித்து நாட்-அவுட் வீரராக இருந்தது குறிப்பிடத்தக்க ஒன்று. வேறு எந்த வீரரும் இச்சாதனையை நெருங்க கூட முடிய வில்லை. ‘ஹெலிகாப்டர் ஷாட்’ நாயகனான டோனி 9 ஆட்டங்களில் சிக்சருடன் இலக்கை நிறைவு செய்ததும் தனித்துவமானது. இதில் 2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் விளாசிய பிரமிக்கத்தக்க சிக்சரும் அடங்கும். ‘ஒட்டுமொத்த தலைமுறையினருக்கும் டோனி உத்வேகம் அளிப்பவராக திகழ்ந்தார்’ என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளது.

16 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு முழுக்கு போட்டுள்ள டோனிக்கு இந்நாள், முன்னாள் வீரர்களின் பாராட்டு மழை வருமாறு:-

சச்சின் தெண்டுல்கர் (இந்தியா): இந்திய கிரிக்கெட்டுக்கு டோனி அளித்த பங்களிப்பு மகத்தானது. டோனியுடன் இணைந்து 2011-ம் ஆண்டு உலககோப்பையை வென்றது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம். அவரது 2-வது இன்னிங்ஸ் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

விராட் கோலி (இந்திய கேப்டன்): நம்மிடையே உள்ள நட்புறவு, சிறந்த நினைவுகளை பகிர்ந்துள்ளோம். அணியை வெற்றிக்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் எப்போதும் செயல்பட்டு வந்துள்ளோம். அதனால் நல்ல புரிந்துணர்வும் உண்டு. உங்களுடன் இணைந்து விளையாடியது மகிழ்ச்சியான அனுபவம். நீங்கள் என் திறமை மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்தீர்கள். அதற்கு எப்போதும் நன்றி கடன்பட்டு உள்ளேன். நான் ஒரு விஷயத்தை அடிக்கடி சொல்வது உண்டு. அதை மீண்டும் சொல்கிறேன். நீங்கள் தான் (டோனி) எப்போதும் எனது கேப்டனாக இருப்பீர்கள். உங்களது அடுத்தகட்ட வாழ்க்கை அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்க வாழ்த்துகள்.

கங்குலி (இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர்): கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் முடிந்து விட்டது. அற்புதமான ஒரு வீரர் டோனி. அவரது தலைமைப்பண்பு வித்தியாசமானது. அதை யாருடனும் குறிப்பாக குறுகிய வடிவிலான போட்டிகளில் ஒப்பிடுவது கடினம்.

ஷேவாக்: வீரர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால் டோனியை போல் யாரும் சாந்தமாக இருக்கமாட்டார்கள். பல கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் ஒரு குடும்ப உறுப்பினர் போலவே இருந்தார்.


Next Story