ஓய்வு குறித்து பொதுவெளியில் அறிவித்த பிறகே எங்களுக்கு ரெய்னா தகவல் தெரிவித்தார்: பிசிசிஐ


ஓய்வு குறித்து பொதுவெளியில் அறிவித்த பிறகே  எங்களுக்கு ரெய்னா தகவல் தெரிவித்தார்: பிசிசிஐ
x
தினத்தந்தி 17 Aug 2020 6:43 AM GMT (Updated: 17 Aug 2020 6:43 AM GMT)

ஓய்வு குறித்த அறிவிப்பை ரெய்னா எங்களிடம் முதலில் தெரிவிக்கவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மும்பை,

இந்திய அணியின்  அதிரடி பேட்ஸ்மேனாகவும் உலகின் தலைசிறந்த ஃபீல்டர்களில் ஒருவராகவும் விளங்கிய சுரேஷ் ரெய்னா கடந்த 15 ஆம் தேதி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.  33-வயதான ரெய்னாவின் இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

நெருங்கிய நண்பரும் சக வீரருமான டோனி  சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த சில நிமிடங்களிலேயே ரெய்னாவும் ஓய்வு அறிவிப்பை தனது இன்ஸ்டகிராம் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். 

இந்த நிலையில், ரெய்னாவின் ஓய்வு அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ, ” ஓய்வு பெறுவது குறித்த தகவலை முதலில் பிசிசிஐ -யிடம்  வீரர்கள் தெரிவிப்பது வழக்கம். ஆனால், ரெய்னா வழக்கத்திற்கு மாறாக பொது வெளியில் அறிவித்த பிறகே பிசிசிஐக்கு தகவல் தெரிவித்தார்” என்று தெரிவித்துள்ளது. மேலும், குறுகிய ஓவர் போட்டிகளில் மிகச்சிறந்த  ஆட்டத்திறனை ரெய்னா வெளிப்படுத்தியதாகவும் பல இக்கட்டான தருணங்களில் சிறப்பாக ஆடி அணியின் வெற்றிக்கு உதவினார் எனவும் பாராட்டியுள்ளது. 

அறிமுகம் ஆன முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த ரெய்னா, மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் ரெய்னா பெற்றுள்ளார்.

Next Story