ரோகித் சர்மா, மாரியப்பன் உள்பட 5 பேருக்கு கேல் ரத்னா விருது - தேர்வு குழு பரிந்துரை


ரோகித் சர்மா, மாரியப்பன் உள்பட 5 பேருக்கு கேல் ரத்னா விருது - தேர்வு குழு பரிந்துரை
x
தினத்தந்தி 19 Aug 2020 12:45 AM GMT (Updated: 19 Aug 2020 12:45 AM GMT)

இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, தமிழக தடகள வீரர் மாரியப்பன் உள்பட 5 பேரின் பெயர்களை தேர்வு குழு பரிந்துரை செய்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசு சார்பில், ஆண்டுதோறும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’, ‘அர்ஜூனா’, ஆகிய விருதுகளும், சிறந்த வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு ‘துரோணாச்சார்யா’ விருதும், விளையாட்டு வளர்ச்சிக்கு பங்களிக்கும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு ‘தயான் சந்த்’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான விருதுக்கு கோரி 500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விளையாட்டு அமைச்சகத்துக்கு வந்து குவிந்தன. இதில் தகுதி படைத்தவர்களை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் ஷேவாக், இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங், தமிழகத்தை சேர்ந்த முன்னாள் சர்வதேச குத்துச்சண்டை வீரர் தேவராஜன் உள்பட 12 பேர் கொண்ட கமிட்டியை மத்திய விளையாட்டு அமைச்சகம் அமைத்தது.

தேர்வு கமிட்டியினர் டெல்லியில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய அலுவலகத்தில் கூடி 2 நாட்களாக ஆலோசித்தனர். கடந்த 4 ஆண்டுகளில் வீரர், வீராங்கனைகள் பெற்ற வெற்றிகள் மற்றும் சாதனைகள் அடிப்படையில் விருதுக்குரிய நபர்களை தேர்வு செய்து அந்த பட்டியலை மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூவிடம் நேற்று அளித்தனர். இதனை மத்திய விளையாட்டு அமைச்சகம் இறுதி செய்து அதிகாரபூர்வமாக அறிவிக்கும். பெரும்பாலும் தேர்வு கமிட்டி அளிக்கும் பட்டியலில் மாற்றம் இருக்காது.

இதன்படி விளையாட்டு துறையின் மிக உயரிய ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா உள்பட 5 பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டியில் மூன்று இரட்டை சதம் அடித்த ஒரே வீரரான ரோகித் சர்மா, கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் 5 சதங்கள் நொறுக்கி புதிய வரலாறு படைத்தார். ஏற்கனவே தெண்டுல்கர், டோனி, விராட்கோலி ஆகியோர் இந்த விருதை பெற்றுள்ள நிலையில், அந்த வரிசையில் 4-வது கிரிக்கெட் வீரராக ரோகித் சர்மா இணைகிறார்.

ரியோ பாரா ஒலிம்பிக் (2016) போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று சாதித்தவரும், கடந்த ஆண்டு நடந்த உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவருமான சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி தடகள வீரரான 25 வயது மாரியப்பன் பெயரும் கேல்ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதே போல் ஆசிய விளையாட்டு சாம்பியனும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றவருமான அரியானாவை சேர்ந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், 2018-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 2 தங்கம் உள்பட 4 பதக்கம் வென்று அனைவரையும் கவர்ந்த டேபிள் டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை மனிகா பத்ரா (டெல்லி) ஆகியோரும் கேல் ரத்னா விருதுக்கு தேர்வாகிறார்கள்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் இந்திய பெண்கள் ஆக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் பெயர் நீண்ட விவாதத்திற்கு பிறகு கடைசி நேரத்தில் கேல்ரத்னா விருது பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்த பட்டியலில் இடம் பெறும் முதல் ஆக்கி வீராங்கனை ராணி ராம்பால் ஆவார். கேல்ரத்னா விருதுக்கு 5 பேரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு இருப்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டில் அதிகபட்சமாக 4 பேருக்கு (பி.வி.சிந்து, சாக்‌ஷி மாலிக், தீபா கர்மாகர், ஜிதுராய்) கேல்ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, வில்வித்தை வீரர் அதானு தாஸ், கபடி வீரர் தீபக் ஹூடா, டென்னிஸ் வீரர் திவிஜ் சரண், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மானு பாகெர், இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி ஷர்மா, ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த் உள்பட 29 பேர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே ‘கேல் ரத்னா’ பெற்றுள்ள மல்யுத்த மங்கை சாக்‌ஷி மாலிக், பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோரின் பெயரும் அர்ஜூனா விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கான விருது விஷயத்தில் மத்திய விளையாட்டுத் துறை மந்திரி இறுதி முடிவு எடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துரோணாச்சார்யா விருதுக்கு ஜஸ்பால் ராணா (துப்பாக்கி சுடுதல்), ஜூட் பெலிக்ஸ் (ஆக்கி) உள்பட 5 பேரும், தயான் சந்த் விருதுக்கு ஜின்சி பிலிப்ஸ் (தடகளம்), அஜீத் சிங் (ஆக்கி), மன்பிரீத் சிங் (கபடி) உள்பட 15 பேரும் பரிந்துரைக்கப்பட்டு இருக்கின்றனர்.

கேல் ரத்னா விருதுக்கு ரூ.7½ லட்சமும், இதர விருதுகளுக்கு ரூ.5 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா வழக்கமாக ஆகஸ்டு 29-ந் தேதி டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும். ஜனாதிபதி விருதுகளை வழங்குவார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டுக்கான விருது விழா குறிப்பிட்ட தேதியில் நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. இருப்பினும் விருது விழா ஆன்-லைனில் நடைபெறும் என்றும், விருதுகள் பின்னர் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Next Story